×

கொசு ஒழிப்பு பணி தீவிரம் டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை: டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் அர்மந்தர் சிங், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் அசோக் டோங்ரே மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து இரு துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து, சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.  பின்னர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி துறை மூலம் மொத்தம் 9,388 கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது. இவை வாகனங்களில் பொருத்தப்பட்டு கொசு மருந்து அடிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 1,81,859 பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதாரத் துறையுடன் இணைந்து வேகமாக பணியாற்ற  அறிவுறுத்தியுள்ளோம். 50 வீட்டுக்கு ஒரு ஆள் என ஒவ்வொருவரும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். நோய் அறிகுறி எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என்பதை ஆய்வு செய்து  அதை தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், ஏர்போர்ட் ஆகிய இடங்களில் தனிகுழு நியமிக்க உள்ளோம். கடந்த ஆண்டில் 100 சதவீத அறிகுறி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 10 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆரம்பத்திலேயே இதை கட்டுப்படுத்தி எங்கேயும் இறப்பு வரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். டெங்கு நோயை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், பஸ் ஸ்டாண்ட்கள், பள்ளிகள், கல்லூரிகளில் நிலவேம்பு கசாயம் இலவசமாக கொடுக்க சொல்லியுள்ளோம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MOSCOW ,SB Velumani , Mosquito eradication, dengue, minister SB Velumani Information
× RELATED மாஸ்கோ தீவிரவாத தாக்குதல் கைதான 4 பேர்...