×

பொதுப்பணித்துறை அலட்சியத்தால் அயன்வடமலாபுரம் கண்மாய் நிரம்பியும் பயனில்லை : விவசாயிகள் வேதனை

எட்டயபுரம்:  தொடர்மழையால் எட்டயபுரம் அருகே உள்ள அயன் வடமலாபுரம் கண்மாய் நிரம்பியும் பயனில்லாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எட்டயபுரம் தாலுகா அயன்வடமலாபுரத்தில் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு நீர்வரத்து கால்வாய், விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி வைப்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டிலிருந்து செல்கிறது. அந்த கால்வாயிலிருந்து செல்லும் தண்ணீர் மேலக்கரந்தை, கீழ்நாட்டுக்குறிச்சி கண்மாய்கள் நிறைந்த பின் அயன்வடமலாபுரம் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கால்வாய் சீராக அமைக்காததால் இருக்கன்குடி அணையில் தண்ணீர் திறந்து விட்டாலும் கண்மாய்க்கு தண்ணீர் வருவது அரிதாகவே இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த தொடர்மழையால் இக்கண்மாய் நிறைந்து மறுகால் பாய்ந்தது.

கண்மாய் நிரம்பியது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் அதிலுள்ள நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கண்மாயில் குறிப்பிட்ட சில இடங்களில் சவுடுமண், அறுவை மண் விதிமுறைகளை மீறி எடுத்ததால் பின்புறம் ஆழமாகவும் தண்ணீர் விவசாய நிலங்களுக்கு வெளியேறும் மடைப்பகுதி மேடாகவும் உள்ளது. இதனால் கண்மாயிலிருந்து தண்ணீர் மடை வழியாக விவசாயநிலங்களுக்கு செல்வது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் மடைபகுதியில் வேலிக்கருவை மரங்கள் முளைத்து அடைத்துள்ளது. கண்மாயின் மடை பகுதியை ஆழப்படுத்தவேண்டும், வேலிக்கருவை மரங்களை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும், உபரிநீர் வெளியேறும் பகுதியில் உள்ள மடையை சுமார் 1 அடி உயர்த்தவேண்டும் என மழைக்காலம் துவங்குவதற்கு முன்பே அயன்வடமலாபுரம் விவசாயிகள் பல முறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் அதற்கு செவிசாய்க்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தனர். இதனால் கண்மாய் நிறைந்து தண்ணீர் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். எனவே கண்மாய் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் விதமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து கரிசல்பூமி விவசாய சங்க தலைவர் வரதராஜன் கூறியதாவது: அயன்வடமலாபுரம் பாசன கண்மாயின் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டது. கண்மாயின் மடை பகுதி மேடாகிவிட்டது. மேலும் கண்மாயின் மத்தியபகுதி மற்றும் பின்பகுதி ஆழமாக உள்ளது. எனவே கண்மாய் நிறைந்தாலும் தண்ணீர் மடைவழியாக விவசாய நிலங்களுக்கு செல்லவில்ைல. மடை பகுதியை ஆழப்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதால் தண்ணீர் இருந்தும் பயனில்லாமல் போய்விட்டது. எனவே கலக்டர் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ayan Vadamalapuram , Public Works Department, ayanvatamalapuram farmers
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...