×

ரோகித் இருக்க பயமேன்... கேப்டன் கோஹ்லி உற்சாகம்

கவுகாத்தி: தொடக்க வீரர் ரோகித் ஷர்மா சிறப்பாக விளையாடும்போது கடினமான இலக்கை துரத்துவதில் எந்தக் கவலையும் இல்லை என்று இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 323 ரன் என்ற கடினமான இலக்கை துரத்திய நிலையில், ரோகித் - கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 246 ரன் சேர்த்து அசத்தியதுடன் பல்வேறு சாதனைகளை படைத்தது. கோஹ்லி 140 ரன்னும், ரோகித் ஆட்டமிழக்காமல் 152 ரன்னும் விளாசினர். ஒருநாள் போட்டிகளில் சச்சின், வார்னர் இருவரும் தலா 5 முறை 150+ ஸ்கோர் விளாசியுள்ள நிலையில், ரோகித் ஷர்மா 6வது முறையாக 150+ ஸ்கோர் அடித்து புதிய சாதனை படைத்தார்.

மேலும், கோஹ்லி - ரோகித் இணைந்து சேர்த்த 246 ரன், சேசிங்கில் இந்திய ஜோடியின் அதிகபட்ச ரன்னாக அமைந்தது. முன்னதாக, 2009ல் கோஹ்லி - கம்பீர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 224 ரன் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.இந்திய அணியின் அபார வெற்றி குறித்து கேப்டன் கோஹ்லி கூறுகையில், ‘இந்த சிறப்பான வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் கடினமான இலக்கை நிர்ணயித்தாலும், நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தால் எளிதாக வெற்றி பெறலாம் என நம்பினோம். ரோகித் இருக்கும்போது சேசிங்கில் எந்த கவலையும் இல்லை. எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் நம்பிக்கையுடன் விளையாடி எட்டிவிடலாம். தொடக்கத்தில் நான் அதிரடியாக விளையாடியபோது அவர் பொறுப்புடன் கம்பெனி கொடுத்தார். நான் ஆட்டமிழந்த பிறகு ரோகித்தின் அதிரடி ஆட்டம் வெளிப்பட்டது. நாங்கள் இருவரும் இணைந்து 5வது அல்லது 6வது முறையாக டபுள் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறோம் என நினைக்கிறேன். அவருடன் இணைந்து விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்’ என்றார்.மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி விசாகப்பட்டணத்தில் நாளை நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kohli ,enthusiast , Roghit,fear ,Captain,Kohli,enthusiast
× RELATED சதம் விளாசினார் கோஹ்லி ஆர்சிபி 183 ரன் குவிப்பு