×

கடன் வாங்கி ஏமாற்றிய 23 பேர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் மோசடிகாரர்களுக்கு மோடி அரசு உடந்தை: காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டை விட்டு தப்பிசெல்லும் மோசடிகாரர்களுக்கு உடந்தையாக செயல்படுகிறது” என காங்கிரஸ் கட்சி  குற்றம்சாட்டியுள்ளது.  டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சச்சின் பைலட், ராஜீவ் சதவ் மற்றும் சுஷ்மிதா தேவ் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: பிரதமர் மோடி தலையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த ஜனவரி வரை 44 மாதங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.90 ஆயிரம் கோடி அளவில், வங்கி மோசடி சம்பவங்கள்  நிகழ்ந்துள்ளன. மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ், ரூ.53 ஆயிரம் கோடியுடன் நாட்டை ஏமாற்றிவிட்டு 23 மோசடிக்காரர்கள் வெளிநாடு தப்பி சென்றுள்ளனர். நாட்டில் பொருளாதார வீழ்ச்சி, வங்கி முறைகேடுகள் அதிகரித்துள்ளது. பாஜ-அருண் ஜெட்லியின் நியூ இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மோசடிக்காரர்கள் வெளிநாடு தப்பிச்  செல்கின்றனர். இவற்றுக்கு பொறுப்பேற்று அமைச்சர் அருண் ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும். விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி உள்ளிட்டோர் மூலம், மோடி அரசாங்கம் மக்கள் பணத்திற்கு பாதுகாவலன் இல்லை என்பதை பிரதிபலிப்பதாக உள்ளது. மாறாக மோசடி,  கொள்ளை மற்றும் வேண்டுமென்றே வங்கிக்கு கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு பறக்க விரும்பவோருக்கு டிராவல் ஏஜென்சியாக அரசு உள்ளது.

நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் மகள் சோனாலி மற்றும் மருமகன் ஜெயீஷ் பக்‌ஷி ஆகியோர் மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்‌ஷியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.24  லட்சத்தை கடந்த ஆண்டு டிசம்பரில் பெற்றுள்ளனர். அந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதால் தனது சட்ட நிறுவனம் பணத்தை திருப்பி செலுத்திவிட்டதாக அமைச்சரின் மருமகன்  தெரிவித்திருந்தார். ஏன் அருண்ஜெட்லி, அவரது மகள், மருமகன் ஆகியோர் சிபிஐ, அமலாக்கப்பிரிவு மூலமாக விசாரிக்கப்படவில்லை. சம்மன் அனுப்பப்படவில்லை. அருண்ஜெட்லியை பதவி நீக்கம் செய்வதற்கு  இது பொருத்தமான வழக்கு இல்லையா?  இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும். வழக்கு பதிவு மற்றும் பல்வேறு புகார்கள் இருந்தபோதும் மெகுல் சோக்‌ஷி, நீரவ் மோடி,  கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் மற்றும் பிறர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களை யார் பாதுகாக்கிறார்கள்?வங்கி மற்றும் மக்கள் பணம் ரூ.26,306 கோடியை மோசடி செய்த நிறுவனத்தில், நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் மகள் மற்றும் மருமகன் ரூ.24 லட்சத்தை ஏன் திரும்ப டெபாசிட் செய்தனர். அதை ஏன்  அவர்கள் மறைக்கிறார்கள்? இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,fraudsters ,Modi , 23 people,borrowed,Modi's complicity Accusation
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி