×

நூற்பாலைகளில் மின் கட்டணம் யூனிட்டுக்கு 40 காசு அதிகரிப்பு : நூல் விலை உயர்கிறது

கோவை: தமிழகத்திலுள்ள நூற்பாலைகள் கொள்முதல் செய்யும் மின்சார கட்டணம் இந்த மாதம் முதல் யூனிட்டிற்கு 40 காசு அதிகரித்துள்ளதால் நூல் உற்பத்தி செலவு கிலோவுக்கு ரூ2 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெரிய, நடுத்தர, சிறு மற்றும் குறு நூற்பாலைகள் என மொத்தம் 1,500க்கு மேல் உள்ளது. இதில் உயர் அழுத்த மின்சாரம் உபயோகிக்கும் நூற்பாலைகள் ஆயிரத்திற்கு மேல் உள்ளன. இவற்றுக்கு தேவையான மின்சாரத்திற்கு தமிழக மின்வாரியம் ஒரு யூனிட்டிற்கு ரூ6.90 கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், தமிழகத்திலுள்ள 7 தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் யூனிட் ரூ5.70க்கு விற்பனை செய்கின்றன. இதனால் உயர் அழுத்த மின்சாரம் உபயோகிக்கும் நூற்பாலைகள் அனைத்தும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்து பயன்படுத்துகின்றன.

 இந்நிலையில், தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் தாங்கள் விற்கும் மின்சாரத்தின் கட்டணத்தில் யூனிட்டிற்கு 40 பைசா அதிகரித்து, இம்மாதம் முதல் ஒரு யூனிட் விலை ரூ6.10 என நிர்ணயித்துள்ளது. மின்கட்டணம் அதிகரித்துள்ளதால், நூல் உற்பத்தி செலவும் ஒரு கிலோ நூலிற்கு கூடுதலாக ரூ2 ஆகிறது. இதனால் நூல் விலையும் உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் மின் கட்டணம் உயர்வு குறித்து தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) மின்னாற்றல் செயலாளர் ரகுராஜன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள தனியார் அனல் மின் நிலையங்கள் மின் உற்பத்தி செய்ய தேவையான நிலக்கரியை இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்கின்றன. சர்வதேச சந்தையில் டீசல் விலை உயர்வு காரணமாக, கப்பல் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதால், தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மின் கட்டணத்தை இந்த மாதம் முதல் உயர்த்தியுள்ளன.

இதனால் நூற்பாலைகளுக்கு நூல் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. சராசரியாக ஒரு கிலோ நூல் உற்பத்தி செய்ய 5 யூனிட் மின்சாரம் தேவை. தற்போது மின் கட்டண உயர்வால் 5 யூனிட்டிற்கு ரூ2 கூடுதல் செலவாகிறது. சராசரியாக ஒரு நூற்பாலை ஒரு நாளில் 10 ஆயிரம் கிலோ நூல் உற்பத்தி செய்தால் ரூ20 ஆயிரம் கூடுதல் செலவும், இதுவே மாதத்திற்கு ரூ6 லட்சம் கூடுதல் செலவாகிறது. இதனால் நூல் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பஞ்சு விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நூற்பாலைகள், மின் கட்டண உயர்வால் மேலும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Spinning, electricity bills, threads
× RELATED மே-21: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை