×

கபாலீஸ்வரர் கோயிலில் மாற்றப்பட்ட 3 சிலைகளும் சன்னதியில் புதைக்கப்பட்டதா? அறங்காவலர் குழுவினர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: கபாலீஸ்வரர் கோயிலில் மாற்றப்பட்ட 3 சிலைகளும் சன்னதியில் புதைக்கப்பட்டதா என்பது குறித்து அறங்காவலர் குழுவினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சிவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புன்னைவனநாதர், ராகு, கேது சிலைகள் சேதமடைந்திருப்பதாக கூறி மாற்றப்பட்டது. இது தொடர்பாக சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது. அதன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக கோயில் இணை ஆணையர் காவேரி, கூடுதல் ஆணையர் திருமகளிடம் விசாரணை நடத்தினார். அதில், ‘சிலைகள் எங்கிருக்கிறது என்று எனக்கு தெரியாது’ என்று தெரிவித்தார். தொடர்ந்து கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
இதைதொடர்ந்து கபாலீஸ்வரர் கோயிலில் ஏற்கனவே பணிபுரிந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் தற்போது பணியில் உள்ள கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்களிடம் நடந்த  விசாரணையில், அர்ச்சகர்கள் தரப்பில், புதிய சிலையை மாற்றிய உடன் பழைய சிலை நிர்வாகத்திடம்தான் ஒப்படைக்கப்படும்.

மேலும், ‘சிலையை புதைக்க வேண்டுமா?’ என்பது குறித்து நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 2004ல் பணியில் இருந்த அறங்காவலர் குழுவினர், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களிடம் விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, 6வது முறையாக நேற்று மதியம் 12 மணியளவில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி குமார் தலைமையிலான போலீசார், கடந்த 2004 காலகட்டத்தில் அறங்காவலர் குழுவில் இருந்த அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் அர்ஜூனன், அச்சக உரிமையாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டவர்களிடமும், அர்ச்சகராக இருந்தவர்களிடமும் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அப்போது, கடந்த 2004ல் சிலை மாற்றியது குறித்து உங்களுக்கு எதுவும் தெரியுமா, அறங்காவலர் குழுவிடம் ஒப்புதல் பெறப்பட்டதா, பழைய சிலை புதைக்கப்பட்டதா, அந்த சிலை எங்கு உள்ளது என தெரியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

அதற்கு அறங்காவலர் குழுவில் இருந்தவர்கள், ‘நாங்கள் கும்பாபிஷேகம் நடப்பதற்கு 27 நாட்களுக்கு முன்னர்தான் நியமிக்கப்பட்டோம். அதனால், எங்களுக்கு தெரியாது. அதே நேரத்தில் சிலை புதைக்கப்பட்டதா என்பதும் எங்களுக்கு தெரியாது’ என்று கூறி உள்ளனர். இந்நிலையில், 2004ல் சிலை மாற்றியது தொடர்பாக பிரசன்னம் பார்த்த அறிக்கை மற்றும் சிலை மாற்றுவதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் போடப்பட்ட தீர்மான நகலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கோயில் நிர்வாகத்திடம் கடந்த 2004ல் கும்பாபிஷேகத்தின் போது, எடுக்கப்பட்ட வீடியோவும் கேட்கப்பட்டது. ஆனால், கோயில் நிர்வாகத்திடம்  வீடியோ இல்லை என்று கூறியதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kapaleshwarar ,shrine , Kapaleeswarar Temple, 3 Statue, Trustee Group, Confession
× RELATED கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழாவில் நற்கருணை பவனி