×

நெல்லை புஷ்கர விழாவால் நெரிசல் அல்வாவுக்காக வெளியூர் பக்தர்கள் அலைக்கழிப்பு...தேவையை ஈடுகட்ட முடியாமல் கடைக்காரர்கள் திகைப்பு

நெல்லை: நெல்லையின் பெயர் சொல்லும் அல்வா கிடைக்காமல் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்கள் கடும் திண்டாட்டத்திற்கு உள்ளாயினர். குறிப்பிட்ட சில கடைகளில் ‘அல்வா தீர்ந்து விட்டது’ என போர்டு எழுதி மாட்டப்பட்டது. நெல்லையில் நடக்கும் மஹா புஷ்கர விழாவிற்கு சரஸ்வதி பூஜை விடுமுறையை ஒட்டி நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து சென்றனர். நேற்று மட்டுமே தாமிரபரணி ஆற்றங்கரைகளில் புஷ்கர விழாவில் பங்கேற்க 5 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டனர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நெல்லைக்கு வருவோரின் முக்கிய தேர்வாக அல்வா உள்ளது.

திக்கெல்லாம் புகழ் பரப்பும் திருநெல்வேலி அல்வா உலகமெங்கும் பார்சலாக பயணிப்பதுண்டு. மஹா புஷ்கரத்திற்கு வரும் பக்தர்களும் குறைந்தபட்சம் ஒரு கிலோ அல்வாவது ஊருக்கு வாங்கி செல்ல எத்தனிக்கின்றனர். இதன் விளைவு கடந்த ஒரு வாரமாக நெல்லை அல்வா கடைகள் கூட்டத்தில் திக்கு முக்காடுகின்றன. அதிலும் மாலை நேரத்தில் திறக்கும் ஒரு கடையில் திருவிழா கூட்டத்தை தினமும் காண முடிகிறது.இவை தவிர நெல்லையில் பிரசித்தி பெற்ற அல்வா கடைகளில் மக்கள் கூட்டம் தினமும் முண்டியடித்து கொண்டிருக்கிறது. நேற்று மஹா புஷ்கரத்திற்கு லட்சக்கணக்கானோர் கூடிய நிலையில், அனைவரும் நெல்லை வந்து அல்வா வாங்க துடித்தனர். இதன் விளைவாக நெல்லை பாலம் போலீசார் சுற்றுலா வாகனங்கள் எதையும் நெல்லை- மதுரை சாலையில் அனுமதிக்கவில்லை.

அண்ணா சிலையிலே போலீசார் நின்று கொண்டு வாகனங்களை வடிகட்டி அனுப்பி வைத்தனர். இருப்பினும் பக்தர்கள் கூட்டம் நெல்ைல சந்திப்பில் உள்ள அல்வா கடைகளை நேற்று காலை முதலே வட்டமிட தொடங்கியது. நேற்று காலை 11 மணிக்கு ஒரு கடையில் ‘அல்வா தீர்ந்துவிட்டது’ என போர்டு எழுதி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து நெல்லை சந்திப்பின் பிரதான கடைகளிலும் அல்வா தீர்ந்துவிட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் சுற்றி சுற்றிவந்து ஒரு அரை கிலோ அல்வா மட்டுமாவது தாருங்கள் என கேட்டு கொண்டே இருந்தனர். நேற்று பிற்பகல் 2 மணிக்கு நெல்லையின் பிரதான கடைகள் அனைத்திலும் அல்வா இருப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது.

ஒரு மணி நேரம் கழித்து வந்தால் தருகிறோம் என பக்தர்களை கடைக்காரர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். வெளிமாவட்ட பக்தர்கள் அல்வா பாக்கெட்டுகளை தேடி நெல்லை டவுனுக்கு வாகனங்களில் சென்றனர். நெல்லையை சேர்ந்த ஒரு அல்வா கடை ஊழியர் கூறுகையில், ‘‘மஹா புஷ்கரம் வந்த நாளில் இருந்தே இரவு, பகலாக அல்வாவுக்கான தேவை அதிகரித்து கொண்டே போகிறது. இருக்கிற ஊழியர்களை வைத்து ஒரு நாளைக்கு ஆயிரம் கிலோ வரை தயாரிக்க முடியும். அதையும் தாண்டி வெளியூர்காரர்கள் வரும்போது தேவையை ஈடு செய்வது கடினம். எத்தனை சட்டி அல்வா வந்தாலும், அடுத்த அரைமணி நேரத்தில் காலியாகி விடுகிறது.’’ என்றார்.

நெல்லையில் அல்வாக்கடை என்ற பெயரில் ஈ ஓட்டி கொண்டிருந்த கடைகளிலும் கூட கடந்த 4 தினங்களாக ஓரளவுக்கு கூட்டம் காணப்படுகிறது. வெளிமாநில பயணிகள் அல்வா எப்படியாவது கிடைத்தால் போதும் என்ற போக்கில் கிடைத்த இடத்தில் வாங்கி செல்கின்றனர். நெல்லை ரயில் நிலையத்தில் அனுமதியின்றி விற்கப்படும் அல்வாவுக்கும் கூட கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு ரயில்வே பாதுகாப்பு போலீசார் 6 பேரை பிடித்து 80 கிலோ அல்வா பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Devotees ,ceremony ,Nelu Pushkara , Nellai Pushkara Festival, Alva, Outdoor devotees and shopkeepers
× RELATED பாலத்தில் மோதி கார் நொறுங்கியது 4 பக்தர்கள் பரிதாப பலி