×

சென்னை அருகே மழைநீர் வடிகால் டெண்டர் முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய இருவர் கைது

சென்னை : சென்னையை அடுத்த சிட்லப்பாக்கத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் முறைகேடு நடந்திருப்பதாக கேள்வி எழுப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கதில் இருந்து சிட்லம்பாக்கம் வரை மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நடைபெறும் இடத்திற்கு கடந்த சனிக்கிழமை சென்ற அறப்போர் இயக்கத்தை சேர்ந்த குமரேசன், பாலச்சந்திரன் ஆகியோர் டெண்டர் பெற்றதற்கான ஆவணத்தை காட்டும்படி பொறியாளரிடம் கேட்டுள்ளனர். மேலும் பணிகள் நடைபெறும் காட்சிகளையும், அவர்கள் தனது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

இதனைக்கண்ட பொறியாளர் மனோகரன் அவர்களது செல்போனை பறித்ததோடு, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, வன்முறையை தூண்டுதல், பொது இடத்தில் தகாத வார்த்தை பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் குமரேசன், பாலச்சந்திரன் ஆகியோர் மீது சிட்லப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மழைநீர் வடிகால் அமைக்க மொத்தம் ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 17ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவதற்கு 20 நாட்கள் முன்பாகவே மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. எனவே இந்த பணிகளை செய்வதற்கான ஒப்பந்தத்தை ஒருவருக்கு வழங்குவதென முன்பே முடிவு செய்து விட்டு, பெயரளவில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்றும், இதன் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை எதிர்த்து கேள்வி எழுப்பியவர்களை கைது செய்யப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : questioning ,rainwater drainage tender ,Chennai , Chennai,Rainwater drainage,Tender abuse,Arrested
× RELATED ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட பெண்ணை...