×

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

தஞ்சை: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் ஏற்பட்ட துர்நாற்றத்தால் பக்தர்கள் அவதிப்பட்டனர். தஞ்சை  புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே 2 ஏக்கர் பரப்பளவில் தெப்பக்குளம் உள்ளது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறும் காலத்தில் இந்த குளத்தில் தான் தெப்பம் விடப்படும். அதுமட்டுமின்றி கோயிலுக்கு வரும்  பக்தர்கள் இந்த குளத்தின் தான் புனித நீராடி செல்வர். மேலும் கோயிலுக்கு முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களும் இந்த குளத்தில் தான் நீராடுவர்.

இவ்வாறு பக்தர்களால் புனிதம் காக்கப்படும் தெப்பகுளம், அறநிலையத்துறையின்  கட்டுப்பாட்டில் உள்ளது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென கோயில் தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதந்தது. இதை பார்த்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமாக கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்தனர். மேலும் புரட்டாசி மாதம்  விரதம் முடிந்த நிலையில் முடிகாணிக்கை செலுத்த பக்தர்களும் வந்திருந்தனர்.

இந்நிலையில் கோயில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் ஏற்பட்ட துர்நாற்றத்தால் பக்தர்கள் அவதிப்பட்டனர். ஆனால் கோயிலை பாதுகாக்கும்  அரண்மனை தேவஸ்தானமும் அருகில் உள்ள தெப்பகுளத்தை கண்டு கொள்வதில்லை. அறநிலையத்துறையினரும் குளத்தை கண்டு கொள்வதில்லை. முறையாக குளத்தை பராமரிப்பு செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று பக்தர்கள்  தெரிவித்தனர். குளத்தில் மர்மநபர்கள் விஷம் ஏதும் கலந்தனரா என்ற கோணத்தில் தஞ்சை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Punnai Nallur Mariamman Temple , Punnai Nallur, Mariamman Temple, Fish
× RELATED கடும் வறட்சி எதிரொலி: டாப்சிலிப்...