×

மூணாறு அருகே பாலம் உடைந்து 2 மாதமாகியும் பழுது நீக்காமல் மெத்தனம் : பள்ளி செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பு

மூணாறு: மூணாறு அருகே ஆத்துக்காடு நீர் வீழ்ச்சியில் உள்ள பாலம் 2 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட கனமழை காரணமாக முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதனை சீரமைக்காததால் மாற்றுப்பாதையில் 10 கி.மீ தூரம் கடந்து மாணவ, மாணவியர் பள்ளி செல்லும் அவலநிலை தொடர்கிறது. மூணாறு அருகே முக்கிய சுற்றுலாதலமான ஆத்துக்காடு நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மூணாறில் கடந்த ஆக.15ம் தேதி பெய்த கனமழை காரணமாக முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அப்போது ஆத்துக்காடு நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இங்கு அமைந்துள்ள முக்கிய பாலம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு மாதங்களானத நிலையில் இப்பாலத்தை சரி செய்யாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில், ஆத்துக்காடு பகுதியில் 360 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பாலம் சேதம் அடைந்ததால் 10 கி.மீ தூரம் மாற்றுப்பாதை வழியாக செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் இந்த மாற்றுப்பாதை ஆபத்து நிறைந்ததாகும். இந்த பாதையில் விபத்து பலமுறை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆத்துக்காடு பகுதியில் 10 பெண்கள் நிறைமாத கர்பிணியாக இருக்கின்றனர்.

மேலும் பல நோயாளிகளும் உள்ளனர். பாலம் இல்லாததால் அவசர கால சிகிச்சைக்கு இவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது மிகவும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. மேலும் கடந்த வாரம் இப்பகுதியில் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த வாலிபர், கடும் முயற்சிக்கு பிறகு மூணாறு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றப்பட்டார். மேலும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மாற்றுப்பாதை வழியாக மிகவும் சிரமப்பட்டு மூணாறில் உள்ள பள்ளிகளுக்கு உயிரை கையில் பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, ஆத்துக்காடு பாலத்தை உடனடியாக சரி செய்ய அரசு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் இளைஞர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Munnar ,Mudumana ,school , Munnar, bridge, school, students
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு