தவறான குற்றச்சாட்டா... குற்றவாளி கூண்டில் நிறுத்துங்கள்: ரோகிணி, நடிகை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க துணை தலைவர்

மீ டூ இயக்கத்தின் நோக்கமே பெண்கள், தவறான ஆண்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும், தவறு செய்தவர்களை அடையாளம் காட்டுவதும்தான். அப்படி அடையாளம் காட்டுவது கூட பழிவாங்கவோ, அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரவோ அல்ல. நம்மை போல மற்ற பெண்களுக்கும் அந்த தவறு நடந்து விடக்கூடாது என்பதற்காக. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை பெண்கள் இதுநாள் வரை சொல்லாமல் பல வருடங்கள் கழித்து சொல்வது ஏன்? என்றுதான் ஆண்கள் கேட்கிறார்களே தவிர. “பெண்களுக்கு இப்போதாவது தைரியம் வந்ததே...” என்று ஒரு ஆண்கூட சொல்லவில்லையே. மீ டூ பெயரில் சிலரை குறிவைத்து குற்றச்சாட்டுகளை எழுப்பப்படும். சில பெண்களால் தவறாக பயன்படுத்தப்படும். இப்படிப்பட்ட புகார்களால் தவறு செய்யாதவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று யாரோ சிலருக்காக பரிதாபப்படுகிறவர்கள், இப்படியெல்லாம் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே என்ற அனுதாபம் கொள்வதில்லையே ஏன்? யாருக்கு யார் பின்புலமாக இருந்து தவறான குற்றச்சாட்டு கூறுகிறார்கள் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள்.

அப்படி யாராவது செய்தால் அவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துங்கள். யார் வேண்டாம் என்று சொன்னது. நாங்களும் அதை தான் எதிர்பார்க்கிறோம். மீ டூ வால் அடையாளம் காட்டப்பட்ட மத்திய அமைச்சர் முதல் பல ஆண்கள் தங்கள் பதவிகளை இழந்திருக்கிறார்கள். பலர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். இதெல்லாம் தவறு நடந்தது என்பதற்கு ஆதாரம்தானே. தவறு செய்யவில்லை என்றால், அவர்கள் வழக்கு போட்டிருக்கலாம்.  குறைந்தபட்சம் உண்மையை உரக்க சொல்லியிருக்கலாம். அதை அவர்கள் செய்யவில்லையே. இன்று நேற்றல்ல, பல  ஆண்டு காலமாகவே பாலியல் தொந்தரவும் பல உருவங்களில் நடந்தபடி இருக்கத்தான் செய்கிறது. பாலியல் தொடர்பாக ஒவ்வொரு வீட்டிலும் பல கதைகள் இல்லாமல் இல்லை. பொறுமையாக அழைத்து பெண்களை கேட்டுப் பாருங்கள் தெரியும். அப்போது புரியும், பெண்கள்  எந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள்  என்று. நம் வீட்டு பெண்கள் நம்மிடம் பாலியல் தொல்லை தந்தவர் பற்றிச் சொன்னால் அவர்களிடம் ஆதாரம் வைத்திருக்கிறாயா? ஏன் இத்தனை நாளாக சொல்லவில்லை என்றா கேட்டுக் கொண்டிருப்போமா? தவறு செய்தவர்களை தண்டிக்க கிளம்ப மாட்டோமா? அதைப்போன்றே மற்ற பெண்களையும் நினைக்க வேண்டும்.

என் மகனுக்கு நான் குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுத்து வளர்த்தேன். தவறானவர்களை எப்படி அடையாளம் காண்பது என்பதையும் கற்றுக் கொடுத்திருக்கிறேன். ஒரு நபர் அவனை தவறான விதத்தில் தொட்டதை அவனே பல வருடங்களுக்கு பிறகுதான் சொன்னான். என் குடும்பத்திலேயே இப்படி என்றால் சாதாரண குடும்பத்தின் நிலையை யோசித்துப் பாருங்கள். எதை நினைத்து பயந்து பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லாமல் இருந்தார்களோ. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அவர்களது பயம் உண்மையானது என்பது இப்போது தெளிவாகி இருக்கிறது. ஆனால் பெண்கள் இதையும் தாண்டித்தான் செல்ல வேண்டும். செல்வார்கள். மீ டூ என்பது பெண்களுக்கான கேடயம்தானே தவிர ஆயுதம் அல்ல.

என் மகனுக்கு நான் குட் டச், பேட் டச்  சொல்லிக் கொடுத்து வளர்த்தேன். ஒரு நபர் அவனை தவறான விதத்தில்  தொட்டதை, அவனே பல வருடங்களுக்கு பிறகுதான் சொன்னான். என் குடும்பத்திலேயே  இப்படி என்றால் சாதாரண குடும்பத்தின் நிலையை யோசித்துப் பாருங்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>