×

உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு காற்றில் பறக்கிறது ஆதார் கார்டு பதிவு செய்தால் மட்டுமே ரேஷன் கடையில் பொருட்கள் கிடைக்கும்

* திடீர் நடைமுறையால் பொதுமக்களுக்கு சிக்கல்

ெசன்னை: ஆதார் கார்டு பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த திடீர் நடைமுறையால் பொதுமக்கள் பலருக்கு இந்த மாதம் ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் உணவுத்துறை அமைச்சர் ஆதார் கார்டு பதிவு செய்யாவிட்டாலும் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறி வருகிறார். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாகவும், மானியமாகவும் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி 20 கிலோ அரிசி இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று வழங்கப்படும் பொருட்கள் முறையாக வழங்காமல் ரேஷன் கடை ஊழியர்கள் முறைகேடு செய்கிறார்கள் என்று பரவலாக புகார் எழுந்தது. இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்கவும், ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் விவரங்களை பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில், ஸ்மார்ட் கார்டு முறையில் (மின்னணு அட்டை) வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதில் புதிய ஸ்மார்ட் கார்டு வடிவிலான குடும்ப அட்டை பெறுவதற்கு ஆதார் கார்டுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி பொதுமக்களும் ஆர்வமாக தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை சமர்பித்து ஸ்மார்ட் கார்டு பெற்றனர். ஆனால் ஒரு சிலர் இன்னும் ஆதார் கார்டு பெறாததால், ரேஷன் கடைகளில் சமர்ப்பிக்காமல் இருந்தனர்.

ஆதார் கார்டு வழங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று கடந்த சில மாதங்களாக தகவல் வெளியாகியது. ஆனால், இப்படி தகவல் வெளியான ஒவ்வொரு முறையும், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அந்த செய்தியை மறுத்து வந்தார். அவர் கூறும்போது, ரேஷன் பொருட்கள் வாங்க ஆதார் கட்டாயம் இல்லை. ஆனாலும், மின்னணு கார்டில் பதிவு செய்ய பொதுமக்கள் ஆதார் கார்டு தகவல்களை அளிக்க வேண்டும். அதேநேரம் ரேஷன் கடை ஊழியர்கள், ஆதார் சமர்ப்பிக்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது என்று கூறி வந்தார். இந்நிலையில், கடந்த வாரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ஆதார் கார்டு பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, “அக்டோபர் மாதம் 7ம் தேதி ரேஷன் பொருள் வழங்குவதற்காக பதிவு செய்யும் நவீன இயந்திரத்தில் புதிய சாப்ட்வேர் ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கடைகளில் ஆதார் கார்டு பதிவு ெசய்தவர்களுக்கு மட்டுமே தற்போது ரேஷன் பொருட்கள் வழங்க முடியும். குடும்ப தலைவர் பெயரில் ஸ்மார்ட் கார்டு இருந்தாலும், அந்த குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் ஆதார் கார்டு பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டுமே இனி பொருட்கள் கிடைக்கும்.

உதாரணமாக, சர்க்கரை கார்டு வைத்திருந்தால் 2 பேருக்கு 4 கிலோ சர்க்கரை வழங்கப்படும் கூடுதலாக உள்ள 2 உறுப்பினர்களுக்கு  ஒரு கிலோ அதிகமாக கிடைக்கும். ஆனால் 4 பேர் உள்ள குடும்பத்தில் 2 பேர் மட்டுமே ஆதார் பதிவு செய்திருந்தால் 4 கிலோ சர்க்கரை மட்டுமே கிடைக்கும். அதேநேரம், ஒரு குடும்பத்தில் ஒருவர் கூட ஆதார் தகவல் பதிவு செய்யவில்லை என்றால் இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாது. அதேபோன்று குடும்பத்தில் ஆதார் எண் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலே பொருட்கள் வழங்க இந்த சாப்ட்வேரில் வழி உள்ளது” என்றார். தமிழக அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் ஆதார் பதிவு செய்யாத பலருக்கு இந்த மாதம் பொருட்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி உணவு வழங்கல் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அரசு வழங்கும் மானிய பொருட்கள் பெற ஆதார் கட்டாயம் என்று தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். இந்த நடவடிக்கையால், அரசுக்கு ரேஷனில் மானியமாக வழங்கப்படும் பொருட்கள் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் பொருள் வழங்குவதற்காக பதிவு செய்யும் நவீன இயந்திரத்தில் புதிய சாப்ட்வேர் ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Food Minister , Minister of Food, Aadhaar card, Ration Store
× RELATED திரிணாமுல் பிரமுகர் சிபிஐயிடம் ஒப்படைப்பு