×

குலசை முத்தாரம்மன் கோயிலில் மகிஷா சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம், இன்று காலை பூஞ்சப்பரத்தில் அம்மன் வீதி உலா

உடன்குடி: ஓம் காளி, ஜெய்காளி கோஷத்துடன் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் நேற்றிரவு மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை பூஞ்சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.மைசூருக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு தசரா திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி 9ம்தேதி காலை 11 மணிக்கு காளிபூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி நடந்தது. 10ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா, 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. பின்னர் விரதமிருந்து வேடமணியும் பக்தர்கள் காப்பு கட்டினர்.
திருவிழாவில் 10 நாட்களும் இரவில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா வரும் வைபவம் நடந்தது. 10ம் திருவிழாவான நேற்று (19ம்தேதி) காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பு எழுந்தருளினார். முதலில் தன் தலையுடன் வந்த சூரனை அம்மன் வதம் செய்தார். அதைத் ெதாடர்ந்து 2வதாக சிங்கமுகம், 3வதாக எருமை முகத்துடன் வந்த சூரனை வதம் செய்த அம்மன், 4வதாக சேவல் முகத்துடன் வந்ததும் இறுதியாக சம்ஹாரம் செய்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம்காளி, ஜெய்காளி என பக்தி பரவசத்துடன் உணர்ச்சி பொங்க கோஷம் எழுப்பினர். இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இன்று அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருளியதும் அபிஷேக ஆராதனை, அதிகாலை 2 மணிக்கு அம்மனுக்கு சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பு சாந்தாபிஷேக ஆராதனை நடந்தது. 11ம் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா வந்தார். அப்போது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 4 மணிக்கு அம்மன் கோயில் வந்து சேர்ந்ததும் கொடியிறக்கும் உற்சவம் நடக்கிறது. பின்னர் அம்மன் காப்பு களைதல் நடைபெறும். தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்கள் காப்பு களைவார்கள். இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிசேகம் நடைபெறும். 12ம் திருவிழாவான நாளை(21ம் தேதி) அம்மனுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, தக்கார் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.திருவிழாவையொட்டி நாகர்கோவில், திருநெல்வேலி, சாத்தான்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும் பக்தர்கள் குவிந்தனர். இதனால் உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mahasana Churasamaharam ,Kulasai Mutharamman Temple - Thousands ,devotees , Kulasekaranpattinam, Mutharaman Temple, Dasara Festival
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி