×

373 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வி: தொடரை கைப்பற்றி பாக். அசத்தல்

அபு தாபி: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 373 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 282 ரன் குவித்தது. பகார் ஸமான், சர்பராஸ் அகமது தலா 94 ரன் விளாசினர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது அப்பாஸ் 5 விக்கெட் வீழ்த்தினார் இதைத் தொடர்ந்து, 137 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 400 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பகார் ஸமான் 66, அசார் அலி 64, ஆசாத் ஷபிக் 44, பாபர் ஆஸம் 99, கேப்டன் சர்பராஸ் அகமது 81 ரன் விளாசினர். ஆஸி. பந்துவீச்சில் லயன் 4 விக்கெட் வீழ்த்தினார். இவர் முதல் இன்னிங்சிலும் 4 விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

538 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 4ம் நாள் ஆட்டத்தில் அந்த அணி 164 ரன்னுக்கு சுருண்டு (49.4 ஓவர்) 373 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது. ஆரோன் பிஞ்ச் 31, ஹெட் 36, லாபஸ்சேன் 43, ஸ்டார்க் 28 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். உஸ்மான் கவாஜா காயம் காரணமாக களமிறங்கவில்லை.  பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது அப்பாஸ் 17 ஓவரில் 2 மெய்டன் உட்பட 62 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தினார். யாசிர் ஷா 3, ஹம்ஸா 1 விக்கெட் கைப்பற்றினர். இரண்டு இன்னிங்சிலும் தலா 5 விக்கெட் வீழ்த்திய அப்பாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 2 போட்டிகள் கொண்ட தொடரை, பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. முகமது அப்பாஸ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி அபு தாபியில் 24ம் தேதி நடைபெற உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Australia ,Wacky , Australia, fiasco, Pakistan
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...