×

இலங்கை அதிபர் சிறிசேனாவை ‘ரா’ அமைப்பு கொல்ல சதி செய்ததா? இலங்கை அரசு திட்டவட்ட மறுப்பு

கொழும்பு: இந்திய உளவு அமைப்பான ‘ரா’ தன்னை கொல்ல சதி செய்ததாக இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா குற்றம் சாட்டவில்லை என்று அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் அந்நாட்டு அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் இரவு கொழும்பில் நடைபெற்றது.
இதில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “இந்தியா - இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொல்ல திட்டமிட்டது. ஆனால், இந்த திட்டம் குறித்து இந்திய பிரதமர் மோடிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்ததாக கூறப்பட்டது.

இது அந்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த செய்திக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. அரசு செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இலங்கையில் ரா உளவாளி கைது செய்யப்பட்டதாக கூறி இரு நாடுகள் இடையே பிரச்னை ஏற்படுத்த முயற்சி நடப்பதாக மட்டுமே அதிபர் கூறினார். மாறாக, இந்திய உளவு அமைப்பு தன்னை கொல்ல திட்டமிட்டதாக அவர் கூறவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sirisena ,Sri Lanka ,Ra ,government , Sri Lankan President, Sirasena to 'Ra', plot to kill
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்