×

தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி: ஓட்டல், ரிசார்ட்களில் புக்கிங் கட் ; நிகழ்ச்சிகள் ரத்து: மென்பொருள் நிறுவனங்களுக்கு 4 நாட்கள் விடுமுறை

சென்னை: தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியாக நட்சத்திர ஓட்டல் மற்றும் ரிசார்ட்களில் அறைகள் புக்கிங் மற்றும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மென்பொருள் நிறுவனங்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை அனுமதியின்றி எடுக்கக்கூடாது என்று கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.  இதைக் கண்டித்து தென்சென்னை மாவட்ட தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.  சுமார் 500க்கும் மேற்பட்ட குடிநீர் டேங்கர் லாரிகள் பழைய மாமல்லபுரம் சாலையில் நாவலூர், ஏகாட்டூர் பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனால், சிறுசேரி ஐ.டி. மென்பொருள் பூங்கா மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள 80க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கடுமையாக பாதிப்படைந்து உள்ளன. குறிப்பாக டி.சி.எஸ்., காக்னிசன்ட் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 4 நாட்கள் விடுமுறை அறிவித்து உள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளை முடிக்க 30 சதவீதம் மென்பொருள் பொறியாளர்கள் மட்டும் வேலைக்கு வந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் நேற்று மாலை முதல் மென்பொருள் பொறியாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் துவங்கினர்.

மேலும், படூர், கேளம்பாக்கம் நாவலூர், கோவளம், கானத்தூர் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கடற்கரை ரிசார்ட்களில் புதிய அறை புக்கிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், கலை நிகழ்ச்சிகள், விடுமுறை தினக் கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அறைகள் வாடகைக்கு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறைகளில் தங்கி உள்ளவர்கள் நீச்சல் குளத்தை பயன்படுத்தக் கூடாது என நிர்வாகம் தெரிவித்ததாக அறைகளில் தங்கி இருந்தவர்கள் தெரிவித்தனர். இன்னும் ஓரிரு நாட்கள் வேலை நிறுத்தம் நீடித்தால் ஓ.எம்.ஆர், இ.சி.ஆர். சாலை முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hotel ,resorts ,software companies , Water lorries strike, hotel, resort, canceling shows, software companies
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...