×

இந்தியாவில் முதன்முறையாக கம்ப்யூட்டர் மயமாகும் அரசு கருவூலங்கள்: முதன்மை செயலர் தகவல்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் அரசு கருவூலம் மற்றும் கணக்கு துறை சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட திறனூட்டல் மாநாடு நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கருவூலம் மற்றும் கணக்கு துறை முதன்மை செயலர் தென்காசி ஜவகர் கலந்து கொண்டார். இதில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கருவூல அதிகாரிகள், ஊழியர்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உட்பட கருவூலம் வழியாக சம்பளம் பெறும் துறையை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கருவூலங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டம் குறித்து முதன்மை செயலர் ஜவகர் கூறியதாவது: தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கம்ப்யூட்டரை பயன்படுத்துவது விரிவுபடுத்தப்படுகிறது.

இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் அரசு அலுவலகங்களில் 1000 டன் காகித பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்படும். இதன் மூலம் சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிதாக கணினி மயமாக்கப்படும். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் இத்திட்டம் வரும் 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு முன்பு ஒரு அரசு ஊழியர், ஓய்வூதிய தொகை அல்லது பிற பணப்பலன்களைப் பெற சுமார் 15 நாட்கள் ஆகும். ஆனால், கருவூலங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டவுடன் 15 நிமிடங்களில், அவர்களின் கணக்கை சரிபார்த்து பணம் கொடுக்கப்படும்.

இதைத் தொடர்ந்து கருவூலங்களில் காலையில் பில், மாலையில் பணம் என்ற நிலை வரவுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் பணி பதிவேடு கணினிகளில் செயல்படுத்தப்படுவதால்  அவர்களின் கணக்குகளை செல்போன் மற்றும் லேப்டாப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் ஒரு அரசு ஊழியர் இன்று ஓய்வுபெற்றால், அதற்கு மறுநாளில் இருந்தே அவருக்கான ஓய்வூதியம் வழங்கும் பணி தொடங்க ஆரம்பித்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : State Treasuries ,India , India, Computer, Government Treasuries, Principal Secretary
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!