×

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் களக்காடு அருகே கால்வாய் உடைப்பை சீரமைத்த விவசாயிகள்

களக்காடு: களக்காடு அருகே கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகளே உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். களக்காடு அருகே மேலப்பத்தையில் பிரவிளாகம் குளம் உள்ளது. களக்காடு யூனியன் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்திற்கு தலையணை மலையடிவாரத்தில் இருந்து முறிசல் வழியாக வரும் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பிரவிளாகம் குளத்தின் மூலமும், கால்வாய் மூலமும் அப்பகுதியில் உள்ள 250 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் வாழை, நெல் பயிர் செய்துள்ளனர்.

அம்பேத்கர் நகர் அருகே கால்வாய் வரும் வழியில் நாங்குநேரியான் கால்வாய் குறுக்கிடுவதால் அதன் மீது பாலம் அமைத்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையினால் கால்வாயில் 6 அடி நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. தற்போது களக்காடு பகுதியில் மழை பெய்து வருவதால் ஆறு மற்றும் கால்வாய்களில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் பிரவிளாகம் குளத்தின் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் குளத்திற்கு தண்ணீர் வருவதில் தடை எழுந்துள்ளது. இதனால் குளம் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள், மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்தனர். ஆனால் கால்வாய் உடைப்பு சீர் செய்யப்படவில்லை. உடைப்பின் வழியாக தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வந்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து விவசாயிகளே கால்வாய் உடைப்பை சீரமைக்க முடிவு செய்தனர் அதன்படி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் முருகன், ரெனி, ஆபிரகாம், பிச்சைமுத்து, இளங்கோவன், அன்புராஜ் மற்றும் விவசாயிகள் சேர்ந்து ஜல்லி கற்கள், சிமெண்ட் மற்றும் உபகரணங்களுடன் கால்வாய் உடைப்பை தாங்களே சீரமைத்தனர்.

தட்டிக்கழித்த அதிகாரிகள்: களக்காடு தாலுகா விவசாயிகள் சங்க செயலாளர் முருகன் கூறுகையில், கரை உடைப்பு குறித்து புகார் தெரிவித்தால் களக்காடு யூனியன் அதிகாரிகள் கால்வாய் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என்றும், பொதுப்பணித்துறையினரோ கால்வாய் களக்காடு யூனியனுக்கு சொந்தமானது என்று கூறி தட்டி கழிக்கின்றனர். இதனால் கால்வாய் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்றே தெரியவில்லை’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : canal brewing ,Kalakkadu , Officers, landlord, canal, farmers
× RELATED மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு...