முதியோரை கலங்க வைக்கிறது ஆதார் : வங்கிகள் ஓய்வூதியம் தர மறுப்பு, திருவாடானையில்தான் இந்த அவலம்

திருவாடானை: ஆதார் இணைக்கவில்லை எனக்கூறி முதியோர் ஓய்வூதிய பணத்தை வழங்காமல் வங்கிகள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. திருவாடானை தாலுகாவில் இந்திராகாந்தி ஓய்வூதியத் திட்டம், உழவர் அட்டை ஓய்வூதிய திட்டம், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் நிதியுதவி திட்டம் மூலம் சுமார் 20 ஆயிரம் பேருக்கு மேல் பயனடைந்து வருகின்றனர். முன்பு இந்த தொகை அஞ்சலகங்கள் மூலம் வழங்கப்பட்டது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்த காரணத்தால் வங்கிகள் மூலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயனடையும் பெரும்பான்மையான முதியவர்கள் படிப்பறிவு இல்லாததால் வங்கிகள் ஏடிஎம் கார்டுகள் வழங்குவதில்லை. இதனால் வங்கிகளின் சேவை மையங்களில் சென்று இதற்கென வழங்கப்பட்டுள்ள இயந்திரத்தில் ரேகை வைத்து தங்களது பணத்தை பெற்றுச் செல்கின்றனர். ஆனால் தற்போது வங்கி சேவை மையங்களில் ஆதார் எண் இணைக்காதவர்கள் ரேகை வைத்து பணம் பெற முடியவில்லை. வங்கிக்கு சென்று ஆதார் அட்டையை இணைத்து வாருங்கள் எனக்கூறி அனுப்பி விடுகின்றனர்.

இதுகுறித்து முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகள் கூறுகையில், ‘‘எங்களுக்கு வயதான காலத்தில் உறவுகள் கை கொடுக்காத போது அரசு ஓய்வூதியத் திட்ட பணம்தான் உதவியாக உள்ளது. அதை வைத்துக் கொண்டு ஊசி, மருந்து, மாத்திரைகள் வாங்கவும் சாப்பாட்டு செலவிற்கும் பயன்படுத்தி காலத்தை கழித்து வருகிறோம். ஆனால் ஆதார் அட்டை இணைக்காததால் வங்கி சேவை மையங்களில் பணம் எடுக்க முடியவில்லை. படிக்காத காரணத்தால் ஏடிஎம் கார்டுகளையும் வங்கிகள் தர மறுக்கின்றன. ஆதார் எண்ணை இணைக்க சொல்லி வங்கிக்கு சென்றால், வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் சேமிப்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஆகையால் இப்போது ஆதார் எண் இணைக்க முடியாது எனக் கூறி எங்களை அலைய விடுகின்றனர்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: