×

குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குமாரக்குடி பள்ளிக்கூட தெருவில் கடந்த சில தினங்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் கடந்த 3 நாட்களுக்கு முன் பழுதானது. இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.  மேலும், பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வயல்வெளி பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தும் அவலம் நீடித்தது. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால், அவர்கள் மின்மோட்டாரை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 100 பேர் நேற்று திடீரென திரண்டு, சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் எஸ்பி சிஐடி திருமுருகன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு ஊராட்சி மன்றத்தலைவரையும் வரவழைத்து இது குறித்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து குடிநீர் வழங்கும் மின் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதாகவும் இதனை சரி செய்து குடிநீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

The post குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chetiyathoppu ,Chethiyathoppu ,Dinakaran ,
× RELATED சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் லஞ்ச...