×

ராஜராஜசோழன் 1033வது சதயவிழா தஞ்சையில் 19ம் தேதி துவக்கம்

தஞ்சை: தஞ்சையில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1033-வது சதய விழா வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் தஞ்சையில் நடைபெற உள்ளது. தஞ்சை பெரியகோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு ராஜராஜ சோழனின் 1033-வது சதயவிழா வரும் 19, 20ம் தேதிகளில் நடக்கிறது. கடந்த 8ம் தேதி விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் நடந்தது. நேற்று சதய விழாக்குழு தலைவர் துரை.திருஞானம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தாண்டு ராஜராஜன் மற்றும் உலகமாதேவி சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்ட பின் நடைபெறும் முதல் சதயவிழா என்பதால் மிக சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம். வரும் 19ம் தேதி காலை கோயில் வளாகத்தில் மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது.

இதைதொடர்ந்து திருமுறை அரங்கம், மேடை நிகழ்ச்சி, மாமன்னன் ராஜராஜன் கண்ட திருமுறைகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம், திருமுறை பண்ணிசை, நாட்டுப்புற பாடல்கள், புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.  2ம் நாளான 20ம் தேதி காலை 7.30 மணிக்கு ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்ட பின் திருமுறை வீதியுலா நடக்கிறது. பின்னர் பெருவுடையார் பெரியநாயகி திருமேனிக்கு 48 வகையான பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மாலையில் மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. அப்போது நாதஇசை சங்கமம், திருமுறை பண்ணிசையரங்கம், வில்லுப்பாட்டு, பரதநாட்டியம் நடக்கிறது. மாமன்னன் ராஜராஜசோழனின் பெரும் புகழுக்கு காரணம் அரசியல் மாட்சியே, அருங்கலை வளர்ச்சியே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.

பின்னர் நடைபெறும் மேடை நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கலெக்டர், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். இதையடுத்து பரதநாட்டியத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இவ்வாறு துரை.திருஞானம் கூறினார். 60 ஆண்டுகளுக்கு பிறகு ராஜராஜசோழன், உலகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதால், முன்பைவிட சதயவிழா விமரிசையாக நடைபெறும். இதனால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு, 20ம் தேதி தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 20ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக கொண்டுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக வரும் நவம்பர் 3ம் தேதி ஈடு செய்யும் பணி நாளாக அறிவித்து கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajarajasolhan ,Satyagraha ,Thanjavur , Rajarajasolhan, Satyavila, Tanjay
× RELATED உப்பு சத்தியாகிரக போராட்ட 93ம் ஆண்டு...