×

குடிநீர், பாசன தேவையை கருத்தில் ெகாண்டு தமிழகத்தில் புதிய நீர்த்தேக்கங்களை அமைக்கும் இடங்களை தேர்வு செய்ய பணிகள் தீவிரம்: அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை ஏரிகளை ஒருங்கிணைத்து ₹330 கோடி மதிப்பில், 1,485 ஏக்கர் பரப்பளவில், 0.5 டிஎம்சி வரை நீரை தேக்கும் வகையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி கடந்த 2013ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக டெண்டர் விட்ட பிறகே, நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியதால் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது. இதனால், நீர்த்தேக்க கட்டுமான பணிகள் 60 சதவீம் வரை தான் முடிந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பொதுப்பணித்துறை அரசு செயலாளர் பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சத்தியகோபால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் பக்தவச்சலம், சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஜெயராம் உள்ளிட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 5 ஆண்டுகளாகியும் நீர்த்தேக்க பணிகளை முடிப்பதில் என்ன சிக்கல் என்று அரசு செயலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பொறியாளர்கள் தரப்பில், ‘‘கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்ததால், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தான் வழக்கு முடிந்து நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக 6 மாதத்திற்குள் முழுவதுமாக இப்பணிகள் முடிக்கப்படும்,’’ என்று பொறியாளர்கள் தெரிவித்தனர்.  மேலும்,  இக்கூட்டத்தில் புதிய நீர்த்தேக்கம் அமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. மழைகாலத்தில் கிடைக்கும் நீர் வீணாவதை தடுக்கவும், குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக தண்ணீரை சேமிக்கும் வகையில் புதிய நீர்த்தேக்கம்  அமைக்கும் பகுதியை கண்டறிய வேண்டும். சென்னையில் ஆரம்பாக்கம், ஒரத்தூர் ஏரியை இணைத்து புதிய நீர் தேக்கம் அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கையை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என்று பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : reservoirs ,Tamil Nadu , Considering,drinking water , irrigation Inquiries ,new reservoirs ,Tamil Nadu
× RELATED கோவை மாவட்டத்தில் வடிகால் பாதை,...