×

பந்தளம் அரண்மனை நிர்வாகி எச்சரிக்கை சபரிமலை போர்க்களம் ஆகக்கூடாது

திருவனந்தபுரம்: ‘‘சபரிமலை போர்க்களம் ஆகக்கூடாது என்பதுதான் எங்களின் எண்ணம்’’ என்று பந்தளம் அரண்மனை நிர்வாகி மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக திருவனந்தபுரத்தில் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில், பந்தளம் அரண்மனை நிர்வாகி சசிகுமார் வர்மா, தந்திரிகள் கண்டரர் மோகனர், கண்டரர் ராஜீவரர், கண்டரர் மகேஷ் மோகனர் மற்றும் ஐயப்ப சேவா சங்கம், ஐயப்ப சேவா சமாஜம், யோக சேம சபை, தந்திரி சமாஜம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், தந்திரி குடும்பம் மற்றும் பந்தளம் அரண்மனை நிர்வாகி சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தேவசம்போர்டு ஏற்கவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

பின்னர், சசிகுமார் வர்மா அளித்த பேட்டியில், ‘‘உச்ச  நீதிமன்றத்தில் தேவசம்போர்டு  மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை சபரிமலையில் பழைய நிலையே தொடர வேண்டும் என்று 2 கோரிக்கைகளை மட்டுமே கூட்டத்தில் வைத்தோம். அதை தேவசம்போர்டு ஏற்க மறுத்துவிட்டது. இது எங்களுக்கு  ஏமாற்றத்தை அளித்ததால், கூட்டத்தில் இருந்து வெளியேறினோம். சபரிமலையை  போர்க்களம் ஆக்கக்கூடாது என்பதே எங்கள் எண்ணம். உச்ச நீதிமன்ற  தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. தேவசம்போர்டு தான்  இதற்கான முடிவை எடுக்க வேண்டும். சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்று  உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், 1991ல் பெண்களுக்கு தடை விதித்த கேரள உயர்  நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யவில்லை. எனவே,  உயர்நீதிமன்ற உத்தரவு  இப்போதும் அமலில் உள்ளது’’ என்றார்.

தேவசம்போர்டு  தலைவர் பத்மகுமார் கூறுகையில், ‘‘இன்றைய பேச்சு தோல்வி அடையவில்லை. உச்ச  நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஏற்கனவே 24 சீராய்வு மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.  நாளை (இன்று) சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள்  மேல்சாந்தி தேர்வு உள்பட முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதனால், 19ம்  தேதி தேவசம்போர்டு கூட்டத்தை நடத்த உள்ளோம். அதில், சீராய்வு  மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் பற்றி தீர்மானிக்கப்படும்.  இந்த பிரச்னையை சுமூகமாக தீர்க்கத்தான் தேவசம்போர்டு  கருதுகிறது. இதில், எந்த அரசியலும் கிடையாது’’ என்றார்.

போராட்டம் தொடரும்
கேரள மாநில பா.ஜ தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை திருச்சூரில் அளித்த பேட்டியில், ‘‘பந்தளம்  அரண்மனை நிர்வாகிகள், தந்திரி குடும்பத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தை  தோல்வியில் முடிவடைந்துள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம் என்ற  தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியில் தேவசம்போர்டு நாடகமாடி  உள்ளது. ேபச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில் போராட்டத்தை மேலும்  தீவிரப்படுத்த பா.ஜ தீர்மானித்துள்ளது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pandalam Palace Administrator ,battlefield , Pandalam Palace Administrator, Sabarimala, Battlefield
× RELATED ரஷ்யாவில் நடைபெறும் 7 நாடுகளின் ராணுவ...