×

திருப்பதி நவராத்திரி பிரமோற்சவ 7ம் நாள் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா: இன்று மகா தேரோட்டம்

திருமலை: திருப்பதி நவராத்திரி பிரமோற்சவத்தின் 7வது நாள் இரவு சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மகா தேரோட்டம் நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 10ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் காலை மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பிரமோற்சவத்தின் 6வது நாளான நேற்று முன்தினம் காலை அனுமந்த வாகனத்திலும், மாலை புஷ்பக விமானத்திலும், இரவு தங்க கஜ (யானை) வாகனத்திலும் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்று காலை 7 குதிரைகள் பூட்டிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்தார்.

அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு, சந்திர பிரபை வாகன உற்சவம் நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட சந்திர பிரபை வாகனத்தில் வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணர் வேடத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்குமாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், பக்தர்கள் திரண்டு கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். பிரமோற்சவத்தின் 8வது நாளான இன்று காலை முக்கிய உற்சவமான மகா தேரோட்டம் நடக்கிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட பெரிய மரத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thampi Navarathri Brahmotsavu , Tirupathi, Navarathri, Malaiyappa Swamy, Street View
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு; நாளை விசாரணை!