×

கண்டலேறு அணை மூலம் தமிழகத்துக்கு 1 டிஎம்சி நீர் கிடைத்துள்ளது: 3 டிஎம்சி வரை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு 24வது நாளில் தமிழகத்துக்கு 1 டிஎம்சி நீர் கிடைத்துள்ளது. மேலும் 3 டிஎம்சி வரை தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகர் மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 டிஎம்சி. இதை தவிர்த்து ஒப்பந்தப்படி தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நீரும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் ஒப்பந்தப்படி கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தண்ணீர் வழங்கும் தவணை காலம் தொடங்கியது. இருப்பினும், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் தண்ணீர் திறந்து விடக்கோரி ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியது.

இதையேற்று கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் 22ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 28ம் ேததி தமிழக எல்லைக்கு கிருஷ்ணா நீர் வந்து சேர்ந்தது. 722 கன அடி வீதம் தமிழக எல்லைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தற்போது வரை 1.01 டிஎம்சி வீதம் தமிழகத்திற்கு வந்துள்ளது. தற்போதைய நிலையில் 4 ஏரிகளை சேர்த்து மொத்தம் 1.3 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இந்த நீரை கொண்டு 1 மாதம் வரை சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
இருப்பினும், 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 14 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் இருந்தால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் தர முடியும். இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு 3 டிஎம்சி வரை நீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu , Expectation , get up
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...