×

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை ஊழியர்கள் ஸ்டிரைக் தொடங்கியது: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் சுமார் 50 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் அட்டைகளுக்கு ஏற்ப கடைகளுக்கு பொருட்கள் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம், ரேஷன் கடை ஊழியர்களுக்கான படியை உயர்த்தி வழங்க வேண்டும், பணி வரன்முறை செய்ய வேண்டும், ஓய்வு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கவில்லை. அதனால் ரேஷன் கடை ஊழியர்களின் ஒரு பகுதியினர் மட்டும் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர்.

இதுகுறித்து நோட்டீஸ் அரசுக்கு அனுப்பப்பட்டும் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. அதனால் திட்டமிட்டபடி 15ம் தேதி (நேற்று) காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நேற்று முன்தினம் கூறி இருந்தார். அதன்படி நேற்று தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்த போராட்டத்தால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை ஆகிய மாவட்டங்களில் 100 சதவீதம் ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை.

தஞ்சையில் 1185 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 700 கடைகள் மூடப்பட்டிருந்தன. தலைமை தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 1020 ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதில், பெரும்பாலான ரேஷன் கடை ஊழியர்கள் கொண்ட சங்கங்களை சேர்ந்தவர்கள் ஈடுபடவில்லை என்று தெரிகிறது.
போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும், 17ம் தேதி (நாளை) 15 மையங்களில் மறியல் போராட்டமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் ரேஷன் கடை பணியாளர்கள் ஈடுபடுவதால் வெளியூர்களில் பல நியாயவிலை கடைகள் மூடியிருந்தன. இதனால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து சென்னையில் உள்ள சில நியாயவிலை கடை சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தற்போது நடைபெறும் ரேஷன் கடை ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு முக்கிய சங்கங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

அதனால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் வழக்கம்போல் ரேஷன் கடைகள் திறந்து உள்ளன. ரேஷன் கடை ஊழியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது. அந்த குழுவினர் விரைவில் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். நியாயவிலை கடை சங்கங்கள் ஒற்றுமையாக போராட வேண்டும் என்றனர். இந்நிலையில், நேற்று பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் தமிழக கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் அனைத்து ரேஷன் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rationing staff ,strike ,government ,Tamilnadu , 30 feature request, staff staff, strike
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...