×

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை ரிஷப் பன்ட், பிரித்வி ஷா முன்னேற்றம்

துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி இளம் வீரர்கள் பிரித்வி ஷா, ரிஷப் பன்ட் இருவரும் சிறப்பான  முன்னேற்றம் கண்டுள்ளனர்.வெஸ்ட் இண்டீசுடன் நடந்த டெஸ்ட் தொடரில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த  தொடரில் அறிமுகமான இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா (18 வயது), ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் 134 ரன் விளாசி சாதனை படைத்தார். அடுத்து  ஐதராபாத்தில் நடந்த 2வது டெஸ்டிலும் முதல் இன்னிங்சில் 70 ரன், 2வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 33 ரன் விளாசி தொடர் நாயகன் விருதை  தட்டிச் சென்றார்.விக்கெட் கீப்பரும் அதிரடி பேஸ்மேனுமான ரிஷப் பன்ட், 2 டெஸ்ட் போட்டியிலும் தலா 92 ரன் விளாசி அசத்தினார். துரதிர்ஷ்டவசமாக சதம்  அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டாலும், தனது துடிப்பான பேட்டிங் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார் பன்ட். இந்திய  அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்திருக்கும் பிரித்வி, பன்ட் இருவரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்ட  தரவரிசை பட்டியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர்.

அறிமுக போட்டியில் சதம் விளாசியதும் 73வது ரேங்க் பெற்ற பிரித்வி, 2வது டெஸ்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து 13  இடங்கள் முன்னேறி 60வது இடத்தை பிடித்துள்ளார். ரிஷப் பன்ட் ஒரேயடியாக 23 இடங்கள் முன்னேறி 62வது இடத்தை பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ்  டெஸ்ட் தொடருக்கு முன்பாக அவர் 111வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விராத் கோஹ்லி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், துணை கேப்டன் அஜிங்க்யா ரகானே 4 இடம் முன்னேறி 18வது இடத்தில்  உள்ளார். ஐதராபாத் டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்ற இந்திய வேகம் உமேஷ் யாதவ் 4 இடம் முன்னேறி 25வது இடத்தை பிடித்தார்.  வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் (52வது இடம்), பந்துவீச்சு (9வது இடம்), ஆல் ரவுண்டர் (3வது இடம்) என மூன்று பிரிவிலும்  முன்னேற்றம் கண்டுள்ளார். தொடரை வென்ற இந்திய அணி 1 புள்ளி கூடுதலாகப் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து 8வது இடத்தில் இருந்தாலும் 1  புள்ளியை இழந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rishap Bund ,Bridvi Shah , ICC Test Cricket,rankings,Rishap Bund, Bridvi Shah, progress
× RELATED ரிஷப் பண்ட் வளர்ந்து வரும் வீரர்; அவரை...