×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாசில்தார், அதிகாரிகளிடம் சிபிஐ தீவிர விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாசில்தார் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம்  சி.பி.ஐ. எஸ்பி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே 22, 23ம் தேதிகளில் நடந்த போராட்டத்தின் போது போலீசாரின் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவங்களில் 13 பேர் பலியாயினர்.  இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.   இதனையடுத்து சிபிசிஐடி போலீசார்  அனைத்து ஆவணங்களையும் கடந்த 8ம் தேதி சிபிஐயிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து 8ம் தேதி சிபிஐ சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் ஒரே  வழக்காக பதிவு செய்யப்பட்டது. சிபிஐ வழக்கு எண் 6 என 14 பிரிவுகளின் கீழ் 20க்கும் மேற்பட்ட அமைப்புகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டன.  இதன் தொடர்ச்சியாக சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவு  எஸ்பி சரவணன், டிஎஸ்பி ரவி ஆகியோர் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடிக்கு நேற்று முன்தினம் வந்து விசாரணையை துவக்கினர். முதல்நாளில் அவர்கள், கலெக்டர் மற்றும்  எஸ்பி ஆகியோரை சந்தித்து விபரங்கள் கேட்டறிந்தனர். பின்னர் தூத்துக்குடி சிப்காட், தென்பாகம், வடபாகம், மத்தியபாகம் காவல் நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி ஆயுதப்படை  பிரிவிற்கு சென்று முக்கிய ஆவணங்களை பெற்றனர்.

 நேற்று 2வது நாளாக சிபிஐ எஸ்பி சரவணன் மற்றும் டிஎஸ்பி ரவி ஆகியோர்  விசாரணையை துவக்கினர். கலெக்டர் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.  அவர்களுக்கு புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருமலை மற்றும் போலீசார் நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கினர். மேலும் கலவரத்தில் எரிந்த வாகனங்களையும், கலெக்டர் அலுவலக  வளாகத்தையும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு நடந்த எப்சிஐ குடோன் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.   பின்னர்  தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் அவர்கள், துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்ட தாசில்தார்கள் சேகர், சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் மற்றும் சம்பவம் நடந்த அன்று  பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். முன்னதாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை பார்வையிட்ட பின்னர் சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பாக முதற்கட்ட  விசாரணையை துவக்கியுள்ளோம். அனைத்து விதமான ஆவணங்களையும் பெற்று வருகிறோம். வழக்கின் விசாரணையை துரிதமாக மேற்கொண்டு வருகிறோம். மேலும் இரு நாட்கள் இங்கு  விசாரணை நடத்த உள்ளோம்’ என்றனர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI ,investigations ,Tuticorin , Tuticorin,firing incident,Tasildar, with the authorities ,The CBI, serious investigation
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...