×

செய்யாறு அருகே பழமையான கோயிலில் இருந்த சிலைகளை மீட்க வந்த அதிகாரியை மக்கள் முற்றுகை: பாதாள அறையில் பத்திரப்படுத்தினர்

செய்யாறு: செய்யாறு தாலுகா செங்கட்டான்குண்டில் பழமையான சவுந்தரநாயகி சமேத நீரு அணிந்தீஸ்வரர் கோயில் சிலைகளை மீட்கவந்த அதிகாரியை அப்பகுதி மக்கள்  முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோயிலில் உள்ள பாதாள அறையில் வைத்து சிலைகளை பத்திரப்படுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா செங்கட்டான்குண்டில் நூற்றாண்டு பழமைவாய்ந்த சவுந்தரநாயகி சமேத நீரு அணிந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிவன், சுயம்பு  மூர்த்தியாக உள்ளார். இந்த கோயில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து சுவாமி சிலைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. கடந்த 2006ல் இக்கோயிலில் இருந்த உற்சவர் சிலைகள் திருட்டு போனது.  இதுகுறித்து மோரணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக இந்து முன்னணியினர், திருட்டு போன சிலைகளை மீட்கவும், கோயிலில் உள்ள மற்ற சிலைகளை பாதுகாக்கவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் மனு அளித்திருந்தனர். அதன்படி கடந்த 3ம் தேதி சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி பழனிச்செல்வம் மற்றும் அவரது குழுவினர் மோரணம் போலீசார் உதவியுடன் கோயிலில் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் நேற்று  முன்தினம் டிஎஸ்பி பழனிசெல்வம், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மேகலா ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கோயிலை பராமரிப்பவர்களிடம் எஞ்சியுள்ள 14 உலோக சிலைகளை பாதுகாக்க ஆலோசனை வழங்கினர். இதையடுத்து நேற்று காலை இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மேகலா,  மோரணம் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட போலீசார் கோயிலுக்கு சென்றனர். அப்போது கோயில் பூட்டப்பட்டிருந்தது. சாவியை கேட்டபோது கோயிலை பராமரித்து  வருபவர் வெளியூர் சென்றிருந்தது தெரியவந்தது. இந்நிலையில் கிராம மக்கள், கோயிலில் உள்ள சிலைகளை எடுக்க விடமாட்டோம் எனக்கூறி இந்து அறநிலையத்துறை ஆய்வாளர்  மேகலாவை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர், ‘பாதுகாப்பு கருதிதான் சிலைகளை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க உள்ளோம். இந்த கிராமத்திலேயே பாதுகாப்பு கட்டிடம் கட்டியதும்  சிலை மீண்டும் இங்கேயே கொண்டுவந்து வைக்கப்படும்’’ என்றார். அதற்கு கிராம மக்கள், ‘கோயிலை நிர்வகிக்க அதிகாரிகள் யாரும் வரவில்லை. சிலையை மட்டும் ஏன் எடுக்க வருகிறீர்கள்?. பாதுகாப்பு அறை கட்டும் வரை, சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு  போடுங்கள்’’ எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒவ்வொரு சிலையாக எடுத்து அவற்றின் எடைகளை குறித்துக் கொண்டு கோயிலில் உள்ள பாதாள அறையில் வைத்து  பத்திரப்படுத்தினர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : People siege ,temple ,Kodar , ancient,temple, Kodar, restore idols, cellar
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள...