×

அரசு பள்ளிகளில் அதிகரித்து வரும் மாணவர் இடைநிற்றல் தடுக்க புதிய உத்தி வகுக்க வேண்டும்:தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு பள்ளிகளில் அதிகரித்து வரும் மாணவர் இடைநிற்றலை தடுக்க புதிய உத்திகளை வகுக்க கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு  ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அரை விழுக்காடாகவும், இடைநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் ஒரு விழுக்காடாகவும் இருந்து வந்தது. கடந்த  ஆண்டில் இதை முறையே 0.1 விழுக்காடாகவும், அரை விழுக்காடாகவும் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது எட்டப்படவில்லை.

அதேநேரத்தில் தொடக்கப்பள்ளிகளுக்கான இடைநிற்றல் விகிதம் கடந்த ஆண்டில் 0.88 விழுக்காடு ஆகவும், இடைநிலைப் பள்ளிகளுக்கான இடைநிற்றல் விகிதம் 1.12% ஆகவும்  அதிகரித்திருக்கிறது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட முறையே 8.8 மடங்கும், 2.24 மடங்கும் அதிகமாகும். இதுதவிர உயர்நிலை வகுப்புகளின் இடைநிற்றல் விகிதம் 3.75% ஆகவும்,  மேல்நிலை வகுப்புகளின் இடைநிற்றல் விகிதம் 1.69% ஆகவும் அதிகரித்திருக்கிறது. இது சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவாகும்.  இடைநிற்றலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உத்திகளை வகுக்க கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்கவேண்டும். அதன் பரிந்துரைகளை நேர்மையாக  செயல்படுத்துவதன் மூலம் இடைநிற்றலை அரசு கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramadoss ,Tamil Nadu ,student dropout , Ramadoss,Tamil Nadu,create new strategy,event student dropout
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...