×

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் மரணம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் நேரில் அஞ்சலி

சென்னை: முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று காலை 10 மணிக்கு  இறுதி அஞ்சலி நடைபெறுகிறது.
சென்னை, பெசன்ட்நகர் இல்லத்தில் வசித்து வந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதிக்கு நேற்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உறவினர்கள் அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர். ஆனால், டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று அறிவித்தனர். அவருக்கு வயது 58. அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரிதி இளம்வழுதி மறைந்த செய்தி கேட்டதும், பெசன்ட்நகர் இல்லத்துக்கு நேற்று காலை நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பரிதி இளம்வழுதி உடலுக்கு அரசியல்  கட்சியினர் வீரமணி, வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன், திருமாவளவன், தயாநிதி மாறன், சரத்குமார், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், மா.சுப்பிரமணியம், சேகர்பாபு, எ.வ.வேலு, வெள்ளையன், ஆர்.சி.பால்கனகராஜ் உள்ளிட்ட  பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பரிதி இளம்வழுதியின் இறுதி அஞ்சலி இன்று காலை 10 மணிக்கு தி.நகர் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் நடைபெறுகிறது .பரிதி இளம்வழுதி தமிழக சட்டமன்றத்துக்கு மொத்தம் 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 11வது சட்டமன்றத்தில் 1996-2001 வரை சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி வகித்துள்ளார். மேலும் 2006-2011ம் ஆண்டு  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் இருந்தார். இவர் தமிழக சட்டமன்ற உறுப்பினராக 28 ஆண்டுகள் (1984-2011) திமுக சார்பில் இருந்தார். தனது 25வது வயதில் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின்  சத்தியவாணி முத்துவை எதிர்த்து போட்டியிட்டு பெரம்பூரில் வெற்றிபெற்றார்.

எழும்பூர் தொகுதியில் 1989 முதல் 2011வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய 1991-1996 காலகட்டத்தில் சட்டமன்றத்தில் ஒரே ஒரு திமுக உறுப்பினராக இவர் செயல்பட்ட விதத்தை  கண்டு தி.மு.க தலைவர் கருணாநிதியால் இந்திரஜித், வீர அபிமன்யு ஆகியோருடன் ஒப்பிடப்பட்டு புகழப்பட்டார். தி.மு.க.வில் துணை பொதுச் செயலாளராகவும் பதவியில் இருந்தார்.திமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். திமுகவில் பரிதி இளம்வழுதியின் வளர்ச்சியை பார்த்த அன்றைய திமுக தலைவர் கருணாநிதி 2006ம் ஆண்டில் செய்தி மற்றும் விளரம்பர துறை அமைச்சர் பொறுப்பை வழங்கினார்.கடந்த 2013ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார். பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் அதிமுகவில் இருந்து பரிதி இளம்வழுதி நீக்கப்பட்டார். அ.தி.மு.கவில் இருந்து விலகி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். ஆனால், சமீபகாலமாக பரிதி இளம்வழுதி அரசியலில்  இருந்து ஒதுங்கி இருந்தார். மு.க.ஸ்டாலின் பேட்டி: பரிதி இளம்வழுதி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: நண்பர் பரிதி இளம்வழுதி மறைவு ஒரு மிகப்பெரிய துயரத்தை எனக்கு மட்டுமல்ல, திமுகவுக்கு ஏற்படுத்தி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல, காரணம் திமுகவின் துணை அமைப்புகளில் ஒன்றாக இருக்கக்கூடிய  இளைஞர் அணி தொடங்கிய நேரத்தில் அவர் ஆரம்ப காலத்திலிருந்து என்னோடு இருந்து அந்த இளைஞரணி வளர்வதற்கு துணை நின்றவர். சிறுவயதிலேயே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு என்னோடு நெருங்கி பழகி கழகம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டு என்னோடு ஒவ்வொருமுறையும் சிறைக்கு வந்தவர் நண்பர் பரிதி இளம்வழுதி. 6  முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திலும் அவரை தேர்ந்தெடுத்த தொகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றி ஒரு நற்பெயரை எடுத்தவர்.

அதுமட்டுமல்ல, தன்னந்தனியாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய வல்லமை படைத்தவர் நண்பர் பரிதி இளம்வழுதி. திமுக ஆட்சி பொறுப்பில் இருந்த நேரத்தில் தலைவர் கலைஞரால் துணை  சபாநாயகராக, செய்தித்துறை அமைச்சராக பணியாற்ற கூடிய வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்தி தந்தார். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் தலைவர் கலைஞரால் இந்திரஜித் என்றும் வீர அபிமன்யு என்றும் பாராட்டை  பெற்றவர் நண்பர் பரிதி இளம்வழுதி. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் அவர் சில நேரங்களில் அரசியல் சூழ்நிலையின் காரணமாக அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக தடுமாறிய நேரத்தில் கூட தலைவர் கலைஞர் அவர் மீது  வைத்திருந்த அன்பை பாசத்தை நாங்கள் என்றைக்கும் மறந்துவிடமாட்டோம். பரிதி இளம்வழுதியை தலைவர் கலைஞர் ஒரு செல்லப்பிள்ளையாகவே வைத்திருந்தார், அவர் மறைந்து விட்டார் என்கிற செய்தி அறிகின்றபோது நான் உள்ளபடியே வேதனைப்படுகிறேன், அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். அவரை இழந்து வாடிக்கொண்டிருக்கக்கூடிய அவருடைய குடும்பத்தாருக்கு, சகோதரர்களுக்கு,  பிள்ளைகளுக்கு திமுகவின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Parrikar ,MK Stalin ,DMK , Former Minister Parrikar ,heart attack,DMK leader, MK Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...