×

பழநியில் ராஜஸ்தான் பொம்மைகள் விற்பனை ஜரூர்

பழநி: ஐயப்ப பக்தர்கள் சீசன் துவங்க உள்ள நிலையில் பழநியில் ராஜஸ்தான் மாநில பொம்மைகள் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் நெருங்கி வருகிறது. இந்த சீசனில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு பழநி கோயிலுக்கு வருகின்றனர். இவ்வாறு வருபவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக பழநி அடிவாரம், சன்னதிவீதி, ஐய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதி மற்றும் கிரிவீதிகளில் ஏராளமான அளவில் பூஜைப் பொருட்கள், பொம்மைகள், விளக்குகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வதற்காக தற்காலிக கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பக்தர்களிடம் விற்பனை செய்வதற்காக ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் பொம்மை, மத்தளம் போன்றவற்றை விற்பனை செய்ய வருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் பழநி நகரிலேயே டெண்ட் அமைத்து தங்கி பொம்மைகள் செய்து விற்பனை செய்கின்றனர். பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொம்மைகள் பக்தர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையில் தற்போது வெளிமாநில வியாபாரிகள் டெண்ட் அமைத்து பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தைச் சேர்ந்த நானி கூறியதாவது, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் வகை மாவினால் பொம்மைகள் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சீசன் அடிப்படையில் சென்று தங்கி பொருட்களை விற்பனை செய்கிறோம். பல்வேறு வண்ணங்களில், பல்வேறு வடிவங்களில் தயார் செய்வதாலும், குறைந்த விலையில் இருப்பதாலும் விற்பனை நன்கு நடக்கிறது. அடிவாரம் பகுதிகளில் மட்டுமின்றி சைக்கிள் மூலம் நகர்பகுதிளிலும், சுற்றுப்புற கிராமங்களிலும் விற்பனை செய்கிறோம். ஏப்ரல் மாதம் வரை தங்கியிருந்து விற்பனை செய்வோம். ரூ.40ல் இருந்து ரூ.400 வரை பொம்மைகள் உள்ளன என்று தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jaroor ,Rajasthani ,palace , Palani, rajasthan, toys, sale
× RELATED தமிழகம் மாளிகை பூங்கா பராமரிக்கும் பணி மும்முரம்