×

ஜெ., மகள் என உரிமை கோரிய அம்ருதாவின் மனு தள்ளுபடி : மரணத்தில் மர்மம் உள்ளதாக நீதிபதி கருத்து

மதுரை: ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, அவரது மரணம் மர்மமாகவே உள்ளது என கூறியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த அம்ருதா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான் என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும். அவரது உடலுக்கு எங்களது வைஷ்ணவ ஐயங்கார் பிராமணர் சமூக முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ஏற்கனவே விசாரித்து இருந்தார். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘ஷைலஜா-சாரதி தம்பதியினர் மனுதாரரை வளர்த்தனர். ஷைலஜா ெஜயலலிதாவின் சகோதரி. எனவே, மனுதாரர் ஜெயலலிதாவின் வாரிசு என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது மனுதாரர் பலமுறை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்துள்ளார். ஜெயலலிதாவும் மனுதாரரை சந்தித்து அன்பு காட்டியுள்ளார்’’ என்றார்.

அரசு தரப்பில், ‘‘அம்ருதா தரப்பில் கூறப்படும் சாட்சிகள் அனைவரும் இறந்து விட்டனர். கற்பனையில் கூறுகிறார். அவரது வாதங்களை மறுப்பதற்கு போதுமான ஆவண, ஆதாரங்கள் உள்ளன’’ என தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்ததால் நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார்.
இந்தநிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேற்று தீர்ப்பு அளித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:
டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிடக்கோரும் மனுதாரர், அதற்கேற்ப போதுமான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. அனைத்து விபரங்களும் வாய்ெமாழியாகவே கூறப்பட்டுள்ளது. தன்னை வளர்த்த சாரதி இறக்கும்போது அம்ருதா, ஜெயலலிதாவின் மகள் என கூறிவிட்டு இறந்ததாகவும், ரகசியமாக வைத்திருக்க கூறியதாகவும் கூறுகிறார். இதை அவர்கள் இருவரும் உயிருடன் இருக்கும்போதே கூறியிருக்கலாம். மாறாக இருவரும் மறைந்த பிறகு கூறுகிறார்.

கடந்த 14.8.1980ல் அம்ருதா பிறந்துள்ளார். கடந்த 6.7.1980ல் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் ஜெயலலிதா பங்கேற்றுள்ளார். அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் ஜெயலலிதா குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தார் என்று கூறும் அளவு அவரது உடல் இல்லை. இதுதவிர, அப்போலோ மருத்துவமனை தரப்பில் ஜெயலலிதாவின் ரத்தமாதிரிகள் இல்லையென கூறப்பட்டுள்ளது. தீபக் மற்றும் தீபா ஆகியோரிடம் ரத்த மாதிரி கேட்டு கட்டாயப்படுத்த முடியாது. அதே நேரம் அம்ருதா தரப்பு சாட்சியங்கள் அனைவரும் இறந்து விட்டனர். திருவிளையாடல் புராணத்தில் இவர்தான் கணவர் என்பதற்கு வன்னி மரம், கிணறு, சிவலிங்கம் உள்ளிட்டவை வந்து சாட்சியம் அளித்ததுபோல அல்ல. இது கலியுக காலம். அதற்கு வாய்ப்பில்லை. போதுமான ஆவணங்கள், ஆதாரம் இல்லை. போட்டோ உள்ளிட்ட எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

சந்தியாவின் உயிலில் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வாரிசு என கூறப்பட்டுள்ளது. ஷைலஜா குறித்து எதுவும் இல்லை. ஜெயலலிதாவுக்கு இரண்டாம் நிலை வாரிசுதாரர்களான தீபா, தீபக் ஆகியோர் மனுதாரர் கேட்கும் நிவாரணத்தை கேட்கலாம். ஆனால், அவர்கள் அதைக் கேட்கவில்லை. தான் ஷோபன்பாபுக்கு பிறந்தவர் என்றால் அவர் உயிருடன் இருக்கும்போது உறுதிப்படுத்தியிருக்கலாம். ஜெயலலிதா தனது சகோதரி என ஷைலஜா கூறியதையடுத்து, ஜெயலலிதா தரப்பில் அவதூறு வழக்கு கூட தாக்கலாகியுள்ளது.
மனுதாரர் வழக்கு தொடர்ந்ததும், சம்பந்தப்பட்டவர்கள் அமைதி காப்பதும் ஜெயலலிதாவின் சொத்துக்களும், உயர் பதவி கிடைக்கும் என்ற எண்ணத்திலும் உள்ளனரோ என தோன்றுகிறது. தற்போது, ஜெயலலிதாவின் மரணம் மர்மமாகவே உள்ளது. அதனால், ஆதாயம் பெறும் வகையிலும், விளம்பர நோக்கிலும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதுமான ஆவண, ஆதாரங்கள் இல்லாததால், டிஎன்ஏ சோதனை மற்றும் தங்களது முறைப்படி சடங்குகள் செய்ய வேண்டுமென்ற மனுதாரர் கோரிக்கை ஏற்புடையதல்ல. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jr. ,Judge ,Amruta ,death , Jayalalithaa, daughter is the right, amruta
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...