×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலையை மாற்றியதற்கான எந்த ஆவணங்களும் இல்லை ; கூடுதல் ஆணையர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 3 சிலைகள் காணாமல் போன விவகாரத்தில், சிலைகளை மாற்றியதற்கான எந்த ஆவணங்களும் இல்லை என கூடுதல் ஆணையர் திருமகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது புன்னை வனநாதர் சன்னதியை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கோயில் இணை ஆணையர் காவேரி, கூடுதல் ஆணையர் திருமகளிடம் விசாரித்தார். புன்னை வனநாதர் சன்னதியில் மயில் வாயில் பூ சிவனை பூஜை செய்வது போன்று அல்லாமல் மயில் வாயில் பாம்பு இருப்பது போன்று அமைக்கப்பட்டிருப்பது ஏன் என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார். மேலும், 3 சிலைகளையும் திடீரென மாற்றியது ஏன், அந்த சிலைகள் மாற்றப்பட்டதற்கான ஆதாரம் எங்கே, தற்போது அந்த சிலைகள் எங்கு இருக்கிறது, சிலை புதைக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது, கூடுதல் ஆணையர் திருமகள் பல கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் அளித்துள்ளார். சுமார் 1.30 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து, திருமகளிடம் சிலை மாற்றியது தொடர்பாக மேலும் ஆவணங்கள் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கூடுதல் ஆணையர் திருமகள் மற்றும் இணை ஆணையர் காவேரி ஆகியோரிடம் விசாரணை நடந்தது. நேற்று 2வது நாளாக இருவரிடமும், கூடுதல் ஏ.எஸ்.பி அசோக் நட்ராஜன் தலைமையில் 8 பேர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது, கூடுதல் ஆணையர் திருமகள், சிலை சேதமடைந்ததாக கூறி குருக்கள் அளித்த பரிந்துரையின் பேரிலேயே சிலை மாற்றப்பட்டது. ஆனால், சிலையை மாற்றியதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. புதிய சிலை மாற்றிய உடனேயே பழைய சிலையை புதைக்க வேண்டும். ஆனால், சிலையை புதைத்தார்களா என்பது எனக்கு தெரியாது. சேதமடைந்த சிலை கோயில் குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலை எங்கிருக்கிறது என்று எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.
அதற்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சிலையை மாற்றவேண்டும் என்றால் எழுத்து மூலமாக கடிதம் சமர்ப்பித்திருக்க வேண்டும். அப்படி ஒரு கடிதம் திருப்பணிக்கு சமர்ப்பிக்கப்பட்டதா என்று கேட்டனர். அதற்கு அவர், கடிதம் சமர்ப்பிக்கப்படவில்லை. வாய்மொழியில்தான் மாற்றப்பட்டது என்று தெரிவித்தார். திருமகளிடம் 4 மணி நேரமாக விசாரணை நடந்தது.
இதையடுத்து சிலையை மாற்ற ஒப்புதழ் அளித்த தலைமை ஸ்தபதியாக இருந்த முத்தையாவிடம் 3 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். அவர், கோயில் நிர்வாகத்தின் வேண்டுகோளின்படியே ஆய்வு செய்ய வந்ததாகவும், சிலை மாற்ற ஒப்புதழ் மட்டுமே என்னால் அளிக்கப்பட்டது. புதிய சிலை கோயில் நிர்வாகத்தின் அறிவுரைப்படிதான் செய்யப்பட்டது. புதிய சிலை மாற்றியவுடன் பழைய சிலை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அதற்கு நிர்வாகம்தான் பொறுப்பு. அவர்கள்தான் சிலையை புதைத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்தார்களா, இல்லையா என்று எனக்கு தெரியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தெப்பக்குளத்தில் புன்னைவன நாதர் நந்தி சிலை வீச்சு

கடந்த 2004ல் புன்னைவன நாதர் சிலை மாற்றப்பட்டபோது அதன் எதிரே இருந்த நந்தி சிலையை, கோயில் நிர்வாகம் சார்பில் மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் தூக்கி வீசப்பட்டது. அதேபோன்று, புன்னைவன நாதர் சிலை கீழே இருந்த பீடமும் கோயில் முன்புற வளாகத்தில் இருந்து கோயில் ஊழியர்கள் கண்டுபிடித்து நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக வாக்குமூலமாகவும் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commissioner ,Mylapore Kapaleeshwarar , Mylapore Kapaleeshwarar temple, statues magic, no documents, additional commissioner
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...