×

சண்முககுளம் மடையில் ஷட்டர் அமைக்காததால் வீணாகும் தண்ணீர் : விவசாயிகள் வேதனை

குளத்தூர்:  குளத்தூர் அருகே வடக்கு கல்மேடு சண்முககுளத்து மடையில் ஷட்டர் அமைக்காததால் தண்ணீர் வீணாக செல்கிறது. விவசாயம் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகேயுள்ள வடக்கு கல்மேடு கல்லாற்று பகுதியில் உள்ள சண்முககுளம் தடுப்பணை மடை கடந்த பல வருடங்களாக சிதிலமடைந்து இருந்தது. இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் தொடர் கோரிக்கையையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் அப்பகுதி மடைகளை சீரமைத்தனர்.

ஆனால் மடைகளை முழுவதுமாக சீரமைக்காமல் அறைகுறையாக பழுது பார்த்து மடையில் ஷட்டர் அமைக்கவில்லை. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் பெய்த மழையில் கண்மாய், குளங்களில் தேங்கிய தண்ணீர் ஷட்டர் இல்லாத மடை வழியாக வீணாக கடலுக்கு சென்றது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக மணல் மூடைகளை அடுக்கி தண்ணீர் வெளியேறுவதை தடுத்து அடைத்தனர். மேலும் தடுப்பணை சுவர்களில் விரிசல் உள்ளதால் விரிசல்கள் வழியே தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. தண்ணீர் முழுவதுமாக வீணாகுவதற்குள் மடைக்கு ஷட்டர் அமைத்து சீரமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயி சிவன் கூறுகையில், கடந்த பல வருடங்களுக்கு முன்பு இப்பகுதி கண்மாயில் தேங்கும் தண்ணீரை கொண்டு வடக்கு கல்மேடு, துரைச்சாமிபுரம் பகுதியிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் வருடத்திற்கு இரு போகம் நெல்பயிர் சாகுபடி மேற்கொண்டோம். ஆனால் இப்பகுதி கண்மாய்கள், குளங்கள், மடைகள் சீரமைக்காததால் தண்ணீர் தேங்குவதும் குறைந்து விவசாயமும் பாதிக்கப்பட்டது. இதுசம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தால் மடைகள் பராமரிப்பு ஏனோ தானே என பார்த்து செல்கின்றனர்.

இதனால் மீண்டும் மடைகள் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது. கண்மாய் தூர்வாராததால் கண்மாய் முழுவதையும்  சீமை கருவேலமரங்கள் ஆக்கிரமித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து இப்பகுதி மடைகளை சீரமைப்பதுடன் மண்மேடாக உள்ள பகுதிகளை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shanmukulam Mutt , Canmukakulam, water, farmers
× RELATED பங்குனி திருவிழாவை முன்னிட்டு...