×

144 ஆண்டுகளுக்குப் பிறகு தாமிரபரணியில் புஷ்கர விழா துவங்கியது பாபநாசத்தில் கவர்னர் புனித நீராடினார்

வி.கே.புரம்: தாமிரபரணி மகா புஷ்கர விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. பாபநாசத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புனித நீராடினார்.
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்தின் நீராதாரமாக திகழும் தாமிரபரணியில், 144 ஆண்டுகளுக்கு பிறகு மகா புஷ்கர விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 4.30 மணியளவில் நாடு முழுவதும் உள்ள 12 முக்கிய நதிகளில் இருந்த புனிதநீர் கொண்டு வரப்பட்டு பாபநாசம் தாமிரபரணியில் ஊற்றப்பட்டது. துறவிகள், சித்தர்கள் புனித நீராடி புஷ்கர விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர், தாமிரபரணி படித்துறைகளில் பக்தர்கள் நீராடினர். காலை 11.30 மணியளவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பாபநாசம்  தலையணை அருகே உள்ள ராஜராஜேஸ்வரி மண்டபத்தில் புனித நீராடினார். கலெக்டர் ஷில்பா, ஐஜி சண்முக ராஜேஸ்வரன், டிஐஜி கபில்குமார் சரத்கர், எஸ்பி அருண்சக்திகுமார், சப்-கலெக்டர் ஆகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து அகில இந்திய துறவிகள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், விழா மலரை கவர்னர் புரோகித் வெளியிட, சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி பெற்றுக்கொண்டார். இதில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதேபோல், பாபநாசம் சித்தர்கள் கோட்டம் சார்பில், சுவாமி ராஜேனீஸ்வரன்  தலைமையில் பக்தர்கள் ஏராளமானோர் அகஸ்தியர் அருவியில் புனித நீராடினர். முன்னதாக யானை மற்றும் குதிரைகள் முன் செல்ல மேளதாள ஊர்வலத்துடன் புனித நீர் எடுத்து வரப்பட்டு தாமிரபரணியில் கலக்கப்பட்டது. மாலையில் தமிழ் ஆகமவிதிப்படி 16 வகை விளக்குகளுடன் தாமிரபரணியில் தீப ஆர்த்தி விழா நடந்தது. தாமிரபரணி புஷ்கர விழாவின் முதல் நாளான நேற்று கூட்ட நெரிசல் அதிகம் இல்லாததால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் நிதானமாக குளித்தனர்.

‘எதிர்கால தலைமுறைக்காக நதிகளை பாதுகாக்க வேண்டும்’
தாமிரபரணி மகா  புஷ்கர விழாவைத் தொடர்ந்து சேனைத் தலைவர் மண்டபத்தில் துறவிகள் மாநாடு நடந்தது. இதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசுகையில் ‘‘தாமிரபரணி மகா புஷ்கரத்தின் போது நீராடியது என் வாழ்நாளில்  மறக்க முடியாதது. நதியின் கலாசாரம், பண்பாடு நமது  வாழ்க்கையுடன் ஒன்றியுள்ளது. நதிகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. நதிகளை நாம் பாதுகாத்து வருங்கால சந்ததிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காகத்தான்  இதுபோன்ற புஷ்கர விழாக்களை முன்னோர்கள் கொண்டாடியுள்ளனர்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pushkara ,ceremony ,Thamiraparana , Pushkara ceremony in Thamiraparani,
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...