×

8 வழிச்சாலை பகுதியில் சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்களை பாதுகாக்க அரசு முயற்சி: சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி

சென்னை: பசுமை வழிச்சாலை அமையும் பகுதியில் சட்ட விரோதமாக மரம் வெட்டியவர்களை பாதுகாக்க அரசு முயற்சி செய்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லக்கூடிய வகையில் 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 வழி பசுமை சாலையை 10 ஆயிரம் கோடி செலவில் அமைக்க காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்காக நில அளவை பணிகளை தமிழக வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், நில உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, பாமக எம்.பி. அன்புமணி, வக்கீல்கள் ஏ.பி.சூரியப்பிரகாசம், வி.பாலு உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  

இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது.விசாரணையின்போது, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் எந்த பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நில உரிமையாளர்கள் சார்பில்  வக்கீல்கள் மோகன், சக்திவேல், நாகஷீலா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.தருமபுரியில் சட்ட விரோதமாக மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால் கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று கடும் கண்டனம் தெரிவித்தனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, அரசிடம் இருந்து வலுக்கட்டாயமாக தகவல்களை பெற வேண்டி உள்ளதாக தெரிவித்தனர். இந்த வழக்கை பொருத்தவரை அரசு வக்கீல்கள் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர வேறு எதுவும் செய்வதில்லை. வழக்கு ஆவணங்களை அருங்காட்சியகத்தில் வைத்து விடலாம்.தருமபுரியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டதில் தமிழக அரசு சிலரை பாதுகாக்க நினைப்பது வருத்தமளிக்கிறது. மரம் வெட்டிய புகாரில் ஜாமீன் பெற்ற அரசு அதிகாரிகளின் ஜாமீனை நிராகரிக்க கோரிய மனுவை பாப்பிரெட்டிபட்டி மாவட்ட நீதிபதி ஏன் காலம் தாழ்த்தி வருகிறார். தொடர்ந்து மனு மீது முடிவெடுக்க காலம் தாழ்த்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்து விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,chopper area ,Madras High Court , 8 Traffic, Employees, Government, Chennai High Court
× RELATED கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!