×

சிலை வாங்கியதற்கான சரியான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை ரன்வீர்ஷா, கிரண் ராவுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது

* ஐகோர்ட் அதிரடி * 15 நாள் போலீஸ் காவலுக்கு ஐஜி கோரிக்கை

சென்னை: சிலை கடத்தல் வழக்கில் ரன்வீர் ஷாவை 15 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோரிக்கை வைத்துள்ளது. அதேசமயம் ரன்வீர்ஷா, கிரண்ராவின் முன்ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பழங்கால சிலைகளை கடத்தி வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் வீட்டில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மாதம் நடத்திய சோதனையில், ஐம்பொன் சிலைகள் உள்பட 247 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் ரன்வீர் ஷாவின் தொழில் பங்குதாரர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தி 23 புரதான சிலைகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, ரன்வீர் ஷாவை போலீசார் தேடி வந்தனர். சிக்கவில்லை. இதையடுத்து, அவர் வௌிநாடு தப்பி சென்று விட கூடாது என்று லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் ரன்வீர்ஷா மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ‘’சிலைகளை எப்போது வாங்கினீர்கள், அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்’’ என்று உத்தரவிட்டனர். இதே வழக்கில் முன் ஜாமீன் கோரி கிரண்ராவ் தாக்கல் செய்த மனுவுக்கும் இதே உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ரன்வீர்ஷா தரப்பில் மூத்த வக்கீல் அசோக்குமார் ஆஜராகி, சைதாப்பேட்டை வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள், அபர்ணா ஆர்ட் கேலரி என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தார். அந்த ஆவணங்களை படித்து பார்த்த நீதிபதிகள், ‘’சிலைகளை வைத்திருக்க மட்டுமே லைசென்ஸ் வழங்கப்படுகிறது. சிலைகளை விற்பனை செய்ய எந்த நிறுவனத்துக்கும் லைசென்ஸ் வழங்கப்படுவதில்லை. அபர்ணா ஆர்ட் கேலரிக்கு சிலைகளை விற்பனை செய்ய லைசென்ஸ் வழங்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது’’ என்றனர்.

அப்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் ஆஜராகி, ‘’1947ம் ஆண்டு முதல் தமிழகத்தில் சிலைகளை விற்பனை செய்ய எந்த லைசென்சும் வழங்கப்படவில்லை. சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளியான தீனதயாளன், கர்நாடகாவில் லைசென்சை வாங்கிவிட்டு சிலைகளை பதுக்கியுள்ளார். லைசென்ஸ் வழங்கிய சம்பந்தப்பட்ட கர்நாடகா அதிகாரிகளை நாங்கள் விசாரித்தபோது, இந்த லைசென்ஸ் சட்டவிரோதமாக வழங்கப்பட்டது என்று தெரியவந்தது. ரன்வீர்ஷா வீட்டில் கைப்பற்றப்பட்ட 222 சிலைகளில் தமிழக கோயில்களில் உள்ள சிலைகள் பல உள்ளன. பல சிலைகளில் கோயில்களின் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. எனவே இவர்களை 15 நாட்கள் போலீஸ் காவலில் விசாரித்தால்தான் மேலும் உண்மைகள் வெளிவரும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது கிரண்ராவ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சண்முகசுந்தரம், கிரண்ராவ் பெண் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது. வழக்கை வரும் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அன்று சிலைகளை வாங்கியது தொடர்பான சரியான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள்’’ என்று மனுதாரர் தரப்பு வக்கீல்களுக்கு உத்தரவிட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranvira ,Kiran Rao , Statue, filing the right documents, Ranveysha, Kiran Rao, Munajin
× RELATED பிரிந்தாலும் மகிழ்ச்சியுடன்தான்...