×

பெங்களூரில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி : அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரூவில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு அவர் வெளிநாடு தப்பிச் சென்று தற்போது லண்டனில் இருக்கிறார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இது தொடர்பான வங்கிகளின் வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார். முன்னதாக 1996 முதல் 1998ம் ஆண்டு வரை நடைபெற்ற பார்முலா ஒன் உலக கார் பந்தயப் போட்டியின் தனது கிங்ஃபிஷர் நிறுவனத்தின் சின்னத்தை விளம்பரப்படுத்துவதற்காக பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ.1.27 கோடியை மல்லையா அளித்தது தொடர்பான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இந்திய ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமலும், அந்நியச் செலாவணி பரிமாற்றச் சட்டத்தை மீறியும் பிரிட்டன் நிறுவனத்துக்கு தொகை பரிமாறப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இதில் மல்லையா நேரில் ஆஜராக இரண்டு முறை நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் ஆஜராகாததால் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக நீதிபதி அறிவித்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே விஜய் மல்லையா வெளிநாடுக்கு தப்பிச்சென்று விட்டார். இதுதொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், இந்தியாவில் உள்ள சிறைகளில் போதிய வசதிகள் இல்லை என மல்லையா கூறியிருந்தார். இதையடுத்து மல்லையாவை கைது செய்தால், அவரை அடைக்கும் சிறையின் புகைப்படங்களை தாக்கல் செய்யுமாறு இந்தியாவுக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஜூலை 31ம் தேதி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் உள்ள வசதிகள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் விஜய் மல்லையாவின் பெங்களூரூ சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : removal ,Delhi Patiala Court ,Vijay Mallya ,Bangalore , Bangalore, Vijay Mallya, Assets Freeze, Delhi Patiala Court
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...