×

ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறப்பு : 22 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்குட்பட்ட பகுதிக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த பிஏபி திட்டத்திற்குட்பட்ட ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய பாசன பகுதிகளுக்கும், குடிநீர்தேவைக்கும் அணையின் நீர் இருப்பை பொறுத்து அவ்வப்போது தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு வழக்கத்தைவிட கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என  விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்த நடவடிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்நிலையில், ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்த அரசு உத்தரவு நேற்று முன்தினம் மாலை சுமார் 5மணியளவில், பிஏபி அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதையடுத்து ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசன வாய்க்கால் ஷட்டரிலிருந்து தண்ணீர் திறப்பை துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் எம்பி.,மகேந்திரன், எம்எல்ஏ.,கஸ்தூரிவாசு, சப்கலெக்டர் காயத்ரி, தாசில்தார் செல்வபாண்டி, செயற்பொறியாளர் கருணாகரன், உதவி செயற்பொறியாளர் நரேந்திரன், புதிய ஆயக்கட்டு பாசன சங்க தலைவர் அசோக்குமார், செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் பொள்ளாச்சி கால்வாய் மண்டலத்தில் உள்ள 11616 ஏக்கர், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் மண்டலத்தில் 2515 ஏக்கர், ஆழியார் ஊட்டுக்கால்வாய் மண்டலத்தில் உள்ள 2362 ஏக்கர் என மொத்தம் 22 ஆயிரத்து 116 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு, 135நாட்கள் உரிய இடைவெளி விட்டு சுழற்சி முறையில் 85 நாட்களில் தினமும் 370கன அடி என மொத்தம் 2709 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்பட உள்ளது பழைய ஆயக்கட்டு பாசனத்தை தொடர்ந்து, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Water opening ,Aliyar Dam , Aliyar dam, ayakkattu, water
× RELATED ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டுக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு