×

விடிய விடிய பெய்த கனமழையால் ஜம்பை கலுங்கு ஏரி நிரம்பியது : கரை உடையும் அபாயம்

பவானி: பவானி அருகே ஜம்பை பேரூராட்சி பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள கலுங்கு ஏரி கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் நிரம்பியது. இந்த ஏரியின் கரைப் பகுதி வலுவிழந்து உள்ளதால் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. ஏற்கனவே பவானி அருகே உள்ள தாலகுளம் ஏரி,  குப்பிச்சிபாளையம் ஏரி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் பெய்த கனமழையால் ஜம்பை பேரூராட்சி கலுங்கு ஏரி நிரம்பியது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு ஜே.ஜே., நகர் பகுதியில் வெள்ளம் புகுந்து, தரைப்பாலத்தை மூழ்கடித்தது.

தொடர்ந்து ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நேற்று காலை முதல் உபரி நீர் வெளியேறி பவானி ஆற்றில் சென்று கலக்கிறது. இந்நிலையில் கலுங்கு ஏரியின் கரைப் பகுதி பலவீனமாக உள்ளதாகவும், ஏரிக்கரை உடையும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்தது. இதனால் ஏரிக்கரையில் அருகாமையில் உள்ள ஜே.ஜே., நகர் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதையடுத்து ஜம்பை பேரூராட்சி நிர்வாகம் சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலவீனமாக உள்ள கரைப் பகுதிகளில் மண் மூட்டைகளை அடுக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த ஏரியில் சில நாட்களுக்கு முன் தூர்வாரப்பட்ட நிலையில், கரைப்பகுதியில் போதிய மண் கொண்டு பலப்படுத்தாததால் மழை வெள்ளத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டு கரை உடையும் அபாயம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jambi Kala ,lake ,shore , Heavy rain, jambai, jungle lake
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!