×

ஓசி குடியால் மூவர் பலியான சம்பவம் : மனைவியை அபகரிக்க நினைத்தவனுக்கு விரித்த வலையில் சிக்கிய பரிதாபம்

வயநாடு: தமிழகத்திலிருந்து வயநாட்டிற்கு வாங்கிச் செல்லப்பட்ட மதுவை குடித்த மந்திரவாதி உள்ளிட்ட மூவர் பலியான சம்பவத்தில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. நண்பனின் மனைவியை வசியம் செய்ய ஒருவர் காணிக்கையாக கொடுத்த மது பாட்டிலே மந்திரவாதியின் குடும்பத்திற்கு எமனாக மாறியுள்ளது தெரிய வந்துள்ளது.  கேரள மாநிலம் வய நாடு அடுத்த வெள்ள முண்டாவை சேர்ந்தவர் 75 வயது மந்திரவாதி திகனாய் . இவர் குடும்பபிரச்சனை ஆண், பெண் வசியம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு பூஜை செய்து மந்திரித்து தாயத்து கட்டிவிடுவது வழக்கம்.இவரிடம் பூஜைக்கு வருவோர் பணத்துடன் காணிக்கையாக மது கொடுப்பது வழக்கம், இந்த நிலையில் கடந்த 3 ந்தேதி மந்திரவாதி திகனாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து அவரது மகன் பிரமோத்தும், மருமகன் பிரசாத்தும் அடுத்தடுத்த நாட்களில் பலியாகி உள்ளனர். மந்திரவாதியை அவர் செய்த தீவினைகள் திருப்பி தாக்கி விட்டதாக ஊருக்குள் தகவல் பரவியது. எனவே இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகமடைந்த காவல்துறையினர் புலன் விசாரணை நடத்தினர்.இதில் இறந்த மூவருமே பொட்டாசியம் சயனைடு கலந்த மதுவை குடித்ததால் உயிரிழந்து இருப்பதை பிணகூறாய்வு அறிக்கை மூலம் காவல்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து விஷம் கலந்த மதுப்பாட்டிலை கொடுத்த சஜித்குமார் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அதில் தனது நண்பர் ஒருவர் பரிசாக கொடுத்த மதுபாட்டிலை மந்திரவாதிக்கு காணிக்கையாக கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து சஜித்குமாரின் நண்பரும் மானந்தவாடி நகைகடை அதிபருமான சந்தோஷை கைது செய்து விசாரித்த போது மதுவில் விஷம் கலந்த மர்மம் விலகியது. நகை கடை அதிபர் சந்தோஷும், சஜித்குமாரும் நண்பர்கள். சந்தோஷ் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் சஜித்குமார், சந்தோஷ் மனைவியை காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். சஜித்குமார் தனது மனைவியுடன் நெருங்கி பழகி வருவதை கண்டறிந்த நகைகடை அதிபர் சந்தோஷ், அவரை பழி தீர்க்க திட்டமிட்டுள்ளார். தமிழக பகுதிக்கு வந்து 1848 என்ற மதுபாட்டிலை வாங்கி சென்ற சந்தோஷ் அதனை சீல் உடைக்காமல் லாவகமாக திறந்து மதுவுடன் பொட்டாசியம் சயனைடு கரைசலை கலந்துள்ளார். பின்னர் தனது நண்பர் சஜித்குமாருக்கு அந்த மதுபாட்டிலை ஓசியில் குடிக்க கொடுத்துள்ளார். ஆனால் அந்த மதுவை அவர் குடிக்கவில்லை. தனது காதலி தன்னிடம் மட்டுமே நெருக்கமாக இருக்க வசிய பூஜை செய்ய மந்திரவாதி திகனாயை சந்தித்துள்ளார். பூஜை முடிந்த பின்னர் சந்தோஷ் கொடுத்த மதுபாட்டிலை மந்திரவாதிக்கு காணிக்கையாக கொடுத்து விட்டு வந்துள்ளார்

சஜித்குமார் விஷம் கலந்த மதுவை முதலில் மந்திரவாதி திகனாய் அருந்தி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மகன் பிரமோத்தும் மருமகன் பிரசாத்தும் அருந்தி உள்ளனர். அதிகமாக குடித்த மந்திரவாதி முதலிலும், அதனை தொடர்ந்து அவரது மகன் மற்றும் மருமகன் ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் பரிதாபமாக பலியானது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சந்தேக மரண வழக்கு, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டு நகை கடை அதிபர் சந்தோஷ் கைது செய்யப்பட்டார்.எந்த ஒரு பொருளும் முன்பின் அறிமுகம் இல்லாதவர் இலவசமாக கொடுத்தால் அதனை பயன்படுத்துவதில் எச்சரிக்கை தேவை.அதுவும் உடலுக்கு கேடு தரும் மதுவை ஓசியில் தரும் நபர்களால் ஒரு போதும் நன்மை விளையாது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : victims ,spouse ,Woe ,OC , Wayanad, alcohol, potassium cyanide
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...