×

வங்கக் கடலில் புதிதாக டிட்லி புயல் உருவானது: ஒடிசா- ஆந்திரா இடையே 11ம் தேதி கரையை கடக்கும்

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ‘டிட்லி’ புயலாக உருவாகியுள்ளது.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக குமரிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று கிழக்கு அரபிக் கடல் பகுதி வழியாக மேற்கு நோக்கி நகர்ந்தது. அது மேலும் வலுப்பெற்று புயலாக  மாறியது. அந்த புயலுக்கு ‘லுபான்’ என்று பெயரிடப்பட்டது. அது ஏமன் பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அந்தமான் அருகே புதியதாக ஒரு காற்றழுத்தம் 8ம் தேதி உருவானது. அது மேலும் வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்தது. அது மேலும்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டு  இருந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக,  நேற்று திருப்பூரில் 110 மிமீ மழை பெய்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும், அது வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா அருகே செல்லும் என்றும்  நேற்று முன்தினம் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று வலுப்ெபற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘டிட்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அது தற்போது ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென்  கிழக்கே 510 கிமீ தொலைவிலும், ஆந்திர மாநிலம் கலிக்கப்பட்டினத்துக்கு 460 கிமீ  கிழக்கு மற்றும் தென்கிழக்கேயும் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று  கடுமையான புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 11ம் தேதி தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்றும், பிறகு வடகிழக்கு திசையில் திரும்பி ஒடிசா  கடலோரமாக  மேற்கு வங்க கடல் பகுதிக்கு சென்று வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும்.  இன்று வங்கக் கடலில் மணிக்கு 90 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். அடுத்தடுத்து அதன் வேகம் கூடிக்கொண்டே சென்று  மணிக்கு 125 கிமீ வேகத்தில் காற்று வீசும். மேலும் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடலில் கடலின் சீற்றம் அதிகமாக காணப்படும். அதனால் மீனவர்கள் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை  கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடலில் அரை மீட்டர் முதல் 1 மீட்டர் வரை அலைகள் எழும்பும்.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1(பிரிவு 2), காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை  கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Diddli ,Bay of Bengal ,Odisha-Andhra , new Diddli storm,Bay of Bengal,Odisha-Andhra
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...