×

மணலாறு கிராமத்தை மிரட்டும் ஒற்றை யானை : வீடு, காய்கறி தோட்டங்கள் நாசம்

சின்னமனூர்: மணலாறு கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை இரவு நேரங்களில் வீடுகளை அடித்து நொறுக்குவதுடன், காய்கறி தோட்டங்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, யானையை காட்டுக்குள் விரட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது, இங்கு மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்பட 7 மலைகிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் தேயிலை, ஏலம் காப்பி, மிளகு உள்ளிட்ட பணப்பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இங்கு அடர்ந்த வனம் இருப்பதால் யானைகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. அத்துடன் காட்டுமாடுகள், சிறுத்தை, சிங்கவால் குரங்கு, பல வகையான பாம்பு இனங்களும் உள்ளன. 7 மலைக் கிராமங்களில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் பகலில் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறிக்கும் போது திடீரென யானை வரும் போது அதனிடமிருந்து தொழிலாளர்கள் தப்பி ஓடிவிடுகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மணலாறு மலைக்கிராமத்தில் ஒற்றையானை மாலை 6 மணிக்கு காட்டுக்குள்ளிலிருந்து இறங்கி வருகிறது. தொழிலாளர்களால் வளர்க்கப்படும் காய்கறி தோட்டங்களை சேதப்படுத்தி வருகிறது. அருகில் உள்ள மரங்களையும் உடைத்து போடுகிறது.

மேலும் வீடுகள் முன்பாக உள்ள கதவுகள்,கண்ணாடி, ஜன்னல்களை உடைத்து வீடுகளுக்குள் உள்ளே புகுவதற்கு முயற்சி செய்வதால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் வீட்டை வெளியேற முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காலையில் யானை காட்டுக்குள் சென்றவுடன் பயத்துடன் வேலைக்கு செல்கின்றனர். இதுகுறித்து வனத்துறைக்கு மக்கள் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உடனடியாக ஒற்றை யானையை நிரந்தரமாக காட்டிற்குள் விரட்டிட வனத்துறை நடவடிக்கை எடுப்பதுடன், குடியிருப்பு பகுதிகளுக்குள் யானை வருவதை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என மணலாறு கிராமமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளர்.

தேவாரத்திலும் அக்கப்போர்

தேவாரம் அடர்ந்த வனப்பகுதிகளில் இருந்து கீழே இறங்கும் ஒற்றை யானை தினமும் தோட்டப் பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. நேற்று வடக்குதெரு சீனிநாடார் மகன் பாண்டி என்பவரின் தோட்டத்தின் வீட்டை நாசப்படுத்தியதுடன், தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட சேமங்கிழங்கை பிடுங்கி வீசி சென்றது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து பதட்டம் அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : village ,Manalur ,House ,vegetable gardens , manalaaru, elephant, house
× RELATED சிதம்பரம் அருகே நகை திருடிய வாலிபர் கைது