×

திருவாடானை அருகே பிற்கால பாண்டியர்களின் கல்வெட்டு கண்டுபிடிப்பு : சிதிலமடைந்த சிவன் கோயிலில் சிக்கியது

திருவாடானை: திருவாடானை அருகே பிற்கால பாண்டிய மன்னர்கள் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ளது மாஞ்சூர். இங்கு சிதிலமடைந்த நிலையில் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு, செயலாளர் ஞானகாளிமுத்து, ஒருங்கிணைப்பாளர் விமல்ராஜ் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிற்கால பாண்டியர்களின் 5 கல்வெட்டுகளை கண்டுபிடிக்கப்பட்டன.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறுகையில், ‘‘5 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை 13ம் நூற்றாண்டை சேர்ந்தவை. இதில் 2 கல்வெட்டுகள் முதலாம் மாறவர்மன் குலசேகரன் காலத்தை சேர்ந்தவை. மேலும் 2 முறையே சடையவர்மன் சீவல்லவன், மாறவர்மன் விக்கிரமபாண்டியன்  காலத்தை சேர்ந்தவை. ஒரு கல்வெட்டு கோனேரின்மை கொண்டான் எனும் அரசாணை கல்வெட்டு ஆகும். சோழர் கால அமைப்பில் உள்ள இக்கோயில் கிபி 1011ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம்.

கல்வெட்டுகளில் இவ்வூர் பெயர்  அரும்பொற்கூற்றத்தை சேர்ந்த மாஞ்சிலானமான மாணிக்கநல்லூர் எனவும், இக்கோயில் இறைவன் பெயர் திருவரகரீஸ்வரமுடைய நாயனார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   மாஞ்சில் எனும் ஊர் பெயர் தற்போது மாஞ்சூர் என மருவியுள்ளது. மாஞ்சில் எனும்  ஒரு மூலிகை தாவரத்தின் பெயரால் இவ்வூர் அமைந்துள்ளது.  சிவன்கோயிலில் விளக்கு ஏற்றுவதற்கு நிலம், தங்கம், பொற்காசுகள், நெல் ஆகியவற்றை தானமாக வழங்கிய தகவல்கள் கல்வெட்டுகளில் உள்ளன. மேலும் இவ்வூரை சேர்ந்த தென்னவன் முதலிநாட்டு மூவேந்த வேளாண், சோலைஅரசு தில்லைநாயகன், பொன்னம்பல கூத்தனான அவனி நாராயண விழுப்பரையன், அரையன் பட்டாலகன் ஆகிய அரசு அதிகாரிகளின் பெயர்கள் கல்வெட்டில் உள்ளன,’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thiruvatanai ,Pandayas ,Shiva , Tiruvatanai, inscription, innovation
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு