×

எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும் பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் மத்திய அரசு தலையிடாது. எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்யும். இந்த நடைமுறையில் ஒரு போதும் மாற்றம் செய்யப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்த பிறகும் மீண்டும் விலை அதிகரித்து வருகிறது. இது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், டெல்லியில் எனர்ஜி போரம் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார். அவர் கூறியதாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 4 ஆண்டில் இல்லாத அளவுக்கு பேரலுக்கு 85 டாலராக உயர்ந்துள்ளது. இது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனால்தான் கலால் வரி குறைப்புக்கு பிறகும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் ஜூன் மாதத்தில் ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் பேரலாக அதிகரிக்க உள்ளன.

இதுகுறித்து சவூதி எண்ணெய் வள அமைச்சர் கலீதா அல் பாலிக்கிடம் நினைவூட்டியுள்ளேன். ஆனால், ஒபெக் நாடுகள் உற்பத்தி இலக்கு உயர்த்துவதை நடைமுறைப்படுத்துமா என்பது சந்தேகம்தான். மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தலா ரூ1.50 குறைத்துள்ளது. இதுபோல், எண்ணெய் நிறுவனங்கள் ஒரு ரூபாயை ஏற்றுள்ளன. இதனால் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வில் இருந்து நுகர்வோர் சற்று மீண்டுள்ளனர். மக்களின் நலத்தை மனதில் வைத்தே மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெட்ரோலிய பொருட்கள் மீதான மானியச்சுமையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இது பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதாக அமையும். அதேநேரத்தில்,

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்யும் என்ற நடைமுறையை திரும்பப்பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை. அவற்றை எண்ணெய் நிறுவனங்கள்தான் முடிவு செய்யும். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப தினசரி விலையை அவை நிர்ணயம் செய்யும் என்றார். இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் தலைவர் சஞ்சீவ் சிங்     கூறுகையில், ‘‘தினசரி விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றது, விலை குறைப்புக்காக எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கைதான்’’ என்றார்.

டீசல் மீண்டும் ரூ78ஐ தாண்டியது வரியை குறைத்த 3 நாளில் 93 காசுகள் அதிகரிப்பு
பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு ரூ2.50  குறைத்தது. இதில் ஒரு ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுள்ளன. இதன்படி கடந்த 5ம் தேதி சென்னையில் பெட்ரோல் ரூ2.63, டீசல் ரூ2.68 குறைந்தது.  ஆனால் அடுத்த நாளே விலை மீண்டும் உயரத் தொடங்கிவிட்டது. கடந்த 6ம் தேதி முதல் நேற்று வரை 3 நாட்களில் சென்னையில் பெட்ரோல் 56 காசு, டீசல் 93 காசு உயர்ந்தது. நேற்று மட்டும் பெட்ரோல் 22 காசு உயர்ந்து ரூ85.26, டீசல் 31 காசு உயர்ந்து ரூ78.04க்கு விற்கப்பட்டது. இதுபோல் பெட்ரோல் டெல்லியில் ரூ82.03, மும்பையில் ரூ87.50, டீசல் ெடல்லியில் ரூ73.82, மும்பையில் ரூ77.37க்கு விற்கப்பட்டது.

முதலைக்கண்ணீர் வடிக்கும் மாநிலங்கள்
மத்திய அரசு வரி குறைத்ததை தொடர்ந்து பல மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன. ஆனால் சில மாநிலங்கள் வரியை குறைக்காமல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி முதலைக்கண்ணீர் வடிக்கின்றன. இந்த விஷயத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், மாநிலங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து வாட் வரியை குறைக்க முன்வரவேண்டும் என பிரதான் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,oil companies ,Dharmendra Pradhan , Petrol, Diesel Price, Central Government, No Interference, Dharmendra Pradhan
× RELATED பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்தது