×

விடுதலைப்புலிகளை புகழ்ந்த இலங்கை முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது

கொழும்பு: விடுதலைப்புலிகள் பற்றி புகழ்ந்து பேசியது குறித்து வாக்குமூலம் அளிக்கச் சென்ற இலங்கை முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று கைது செய்யப்பட்டார். இலங்கையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக பணியாற்றிவர் விஜயகலா மகேகஸ்வரன்(45). இவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சார்பில் இலங்கை வடக்கு மாகாணத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர். இவர் யாழ்பாணத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ‘‘வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. பள்ளிக்கு சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சமூக கொடுமைகள் எல்லாம் விடுதலைப் புலிகள் ஆட்சி காலத்தில் நடந்ததில்லை. நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் மீண்டும் விடுதலைப் புலிகள் கை ஓங்க வேண்டும்’’ என்றார். இந்த பேச்சுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷே தலைமையிலான எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து விஜயகலாவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து விஜயகலா பேசியது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா என்பதை உறுதி செய்ய வேண்டும் என போலீஸ் விசாரணை குழுவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றத்தடுப்பு பிரிவில் நேற்று ஆஜராக விஜயகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி கொழும்புவில் உள்ள குற்றத்தடுப்பு பிரிவில் விஜயகலா நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அங்கு அவரை போலீசார் கைது செய்ததாக காவல்துறை செய்தி தொடர்பாளர் எஸ்.பி.ருவான் குணசேகரா தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wijayakala Maheswaran ,Sri Lankan , LTTE, former Sri Lankan minister Vijayakala Maheswaran, arrested
× RELATED இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது