×

சவுடுமண் பெயரில் முறைகேடு தாமிரபரணியில் மணல் அள்ள ஐகோர்ட் கிளை தடை விதிப்பு: நெல்லை கலெக்டருக்கு நோட்டீஸ்

மதுரை: நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் திருமலை கொழுந்துபுரம் பகுதியில் சவுடுமண் பெயரில் ஆற்றுமணல் அள்ளுவதற்கு விசாரணை முடியும் வரை தடை விதித்த ஐகோர்ட் கிளை, நெல்லை கலெக்டர், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தாமிரபரணி சுற்றுச்சூழல் விவசாயிகள் பாதுகாப்பு அறக்கட்டளை செயலாளர் நடராஜன். இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா தாமிரபரணி ஆற்றில் திருமலை கொழுந்துபுரம் பகுதியில் சவுடு மண் அள்ள அனுமதி பெற்றுவிட்டு,  ஆற்று மணலை அள்ளி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் 1992ம் ஆண்டு ஏற்பட்டது போல் வெள்ளப்பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இரவு, பகலாக மணல் அள்ளி விற்பனை செய்து வருகின்றனர்.

சவுடு மண் பெயரில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளும் கும்பல், தனிநபர்களை மிரட்டி தாக்குதல் நடத்துகின்றனர். இதுதொடர்பாக சமீபத்தில் காவல்நிலையத்தில்  வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து மணல் அள்ளுவது தொடர்பாக இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் இதுவரை மூவர் பலியாகியுள்ளனர்.  தாமிரபரணி ஆற்றில் சவுடு மண் உரிமத்தை வைத்துக்கொண்டு ஆற்றுமணல் அள்ளுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மணல் அள்ளுவதற்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இம்மனு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை முடியும் வரை மணல் அள்ளக்கூடாது எனக் கூறி, இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர், நெல்லை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை 2 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : சவுடுமண் , முறைகேடு ,தாமிரபரணி,ஐகோர்ட் கிளை , நெல்லை கலெக்டர்
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...