சேலம்: தமிழக மின் வாரியத்தில் புதிய இணைப்பு, மீட்டர் இடமாற்றம் உள்ளிட்ட பிற பணிகளுக்கு மக்கள் செலுத்துகின்ற கட்டணத்திற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வசூல் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் 2 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நடப்பு மாத பில் வசூலில், ஒரு சிலரது கணக்கில் மட்டும் 18 சதவீத ஜிஎஸ்டி வசூல் என ஒரு குறிப்பிட்ட தொகையை பில்லுடன் சேர்த்து வசூலித்தனர். இதை பார்த்து, மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மின் வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, மின் சேவையில் புதிய இணைப்பு, மீட்டர் இடமாற்றம், லைன் மாற்றம் போன்றவற்றை மேற்கொண்டதற்கு விண்ணப்ப பதிவு கட்டணத்துடன் 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதை தற்போது அமலுக்கு கொண்டு வந்துள்ளோம், எனத்தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின் வாரியத்தில் கடந்த 1.7.2017ம் தேதிக்கு பின் புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்தவர்கள், பதிவு கட்டணமாக 50 செலுத்தி இருப்பார்கள். அந்த தொகைக்கு ஜிஎஸ்டி 18 சதவீதத்தை அப்போது வசூலிக்கவில்லை. தற்போதுதான் அந்த ஜிஎஸ்டி, பில் கட்டணத்துடன் இணைக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், மீட்டர் இடமாற்றம், வீட்டு இணைப்பை, கடை இணைப்பாக மாற்றுதல், கடை இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றுதல், லைன் இடமாற்றம் என பல்வேறு மின் சேவையை பெற மக்கள் நாடும்போது, பதிவு கட்டணம் மற்றும் டெஸ்டிங் கட்டணம் செலுத்துவார்கள். அந்த கட்டணத்திற்கும் 18 சதவீத ஜிஎஸ்டி உண்டு. அந்த தொகையையும் தற்போது வசூலிக்கிறோம். கணினியில் தற்போதுதான், அக்கட்டண விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால், இம்மாத மின்சார கட்டணத்துடன் கடந்த 1.7.2017க்குப்பின் சேவை பெற்றவர்களுக்கு மட்டும் அக்கட்டணத்திற்கான ஜிஎஸ்டியை சேர்த்து பெறுகிறோம். இதுதொடர்பாக மக்கள் எந்த குழப்பமும் அடைய தேவையில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
