×

பக்தர்களின் நமச்சிவாயா கோஷத்துடன் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்…மக்கள் வெள்ளம்; பக்தி பரவசம்

மயிலாப்பூர்: சிவதலங்களில் பிரசித்திப்பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில்  திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்த் திருவிழா இன்று நடந்தது. தேரோட்டத்தையொட்டி கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 8 மணிக்கு  திருத்தேரில் எழுந்தருளினார். சர்வ அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன.இதைத்தொடர்ந்து காலை 8.45 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. இதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேளதாளம், நாதஸ்வரம் முழங்க  கபாலீஸ்வரர் எழுந்தருளிய தேர் அசைந்தாடியபடி வீதியுலா புறப்பாடு தொடங்கியது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘‘தென்னாடுடைய சிவனே போற்றி.எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.. நமச்சிவாய வாழ்க… நாதன் தாள் வாழ்க என்று  பக்தி கோஷங்கள் எழுப்பினர்.மாட வீதிகள் வழியாக வலம் வந்த தேர், பிற்பகலில் நிலைக்கு வந்து நின்றது. திருத்தேரில் இருந்து கபாலீஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து ஐந்திருமேனிகள் ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த தேரோட்டத்தையொட்டி  ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அசம்பாவித சம்பவத்தைத் தவிர்க்கும் வகையில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. கோயிலை சுற்றிலும் அனைத்து  பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு மாடவீதிகளில் பல இடங்களில்  தொண்டு நிறுவனங்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மோர், குளிர்பானங்கள் வழங்கினர்.பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா நாளை நடைபெறுகிறது. 63 நாயன்மார்கள் பல்லக்குகளில் எழுந்தருளுகின்றனர். அப்போது, வெள்ளி விமானத்தில் கற்பகாம்பாளுடன் கபாலீஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர்.  நாயன்மார்கள் எழுந்தருளும் பல்லக்குகள் வரிசையாகப் புறப்பட்டு மாடவீதிகளில் வீதியுலா வருவதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. …

The post பக்தர்களின் நமச்சிவாயா கோஷத்துடன் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்…மக்கள் வெள்ளம்; பக்தி பரவசம் appeared first on Dinakaran.

Tags : Chariot ,Kapaleeswarar temple ,Namachivaya ,Mylapore ,Panguni festival ,Mylapore Kapaleeswarar temple ,Shiva ,
× RELATED கண்டாச்சிபுரம் அருகே திரவுபதி அம்மன்...